

தமிழகத்தில் 2.07 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணை யாக கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். நியாயவிலைக் கடைகளில் வரும் 15-ம் தேதி முதல் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுப் பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ள மக்களை பாதுகாத்து ஆறுதல் அளிக்கும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் அன்று ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதல்வராக பொறுப்பேற்ற மே 7-ம் தேதியன்றே, 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,153.39 கோடியில் கரோனா நிவா ரணம் முதல் தவணையாக ரூ.2 ஆயி ரத்தை மே மாதத்திலேயே வழங்குவதற் கான உத்தரவில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
அதன்படி, இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செய லகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக 7 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உணவுத் துறை செயலர் தயானந்த் கட்டாரியா, நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் எம்.சுதாதேவி, உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் சஜ்ஜன் சிங் சவான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டோக்கன் விநியோகம் தொடக்கம்
அனைத்து நியாயவிலைக் கடை களிலும் இத்தொகை விநியோகம் வரும் மே 15-ம் தேதி தொடங்குகிறது. தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணிக்குள் தொகையை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான டோக்கன் விநியோகமும் நேற்றே தொடங்கியது. நியாயவிலைக் கடை பணியாளர்கள் வீடு வீடாக வந்து டோக்கன் வழங்கும் பணியை 12-ம் தேதி (நாளை) வரை மேற்கொள்வார்கள். டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள், நேரத்தில் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின் பற்றி நியாயவிலைக் கடைக்கு சென்று நிவாரணத் தொகையை பெற்றுக் கொள் ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் 200 பேருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டு டோக்கன் வழங்கப்படுகி்றது.
எப்போது வரை கிடைக்கும்
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளபோதிலும், நியாயவிலைக் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும், சென்னையில் இருந்து சுமார் 2.5 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். இதுபோல பல பெருநகரங்களில் இருந்தும் ஏராள மானோர் சொந்த ஊர்களுக்கு சென் றுள்ளனர். கடந்த ஓராண்டாகவே பள்ளி வகுப்புகளும் ஆன்லைனிலேயே நடப்ப தால், ஏற்கெனவே பலரும் சொந்த ஊரிலேயே தங்கியுள்ளனர்.
இவர்கள் நேரில் வந்தால் மட்டுமே நிவாரணம் பெற முடியும். எனவே, கரோனா நிவாரணம் முதல் தவணை ரூ.2 ஆயிரத்தை எப்போது வரை பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்து அரசு அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விரல் ரேகை பதிவால் சிக்கல்
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், விரல் ரேகை பதிவு மூலம் மேற்கொள்ளப்படும் வருகைப் பதிவு உள்ளிட்ட நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், நியாயவிலைக் கடைகளில் விரல் ரேகை பதிவு முறைதான் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரமும் இந்த முறையில்தான் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரல் ரேகை பதிவு மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் என்பதால், இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.