தற்காலிக தலைவராக கு.பிச்சாண்டி பதவியேற்பு; தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்

தற்காலிக தலைவராக கு.பிச்சாண்டி பதவியேற்பு; தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை தற்காலிகத் தலைவர் கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. கடந்த 7-ம் தேதி முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் அவருடன் 33 அமைச்சர்களும் பதவி யேற்றனர். சட்டப்பேரவை முன்னவராக அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு கொறடாவாக திரு விடைமருதூர் எம்எல்ஏ கோவி.செழியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெற்றி பெற்றவர்கள் எம்எல்ஏக்களாக பதவியேற் பதற்காக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. சட்டப்பேரவை தற்காலிகத் தலைவர் எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது வழக்கம்.

அதன்படி, பேரவை தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்ட கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டி, சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை யில் நேற்று காலை பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச் சர்கள், சட்டப்பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் வந்த கு.பிச்சாண்டி அதிகாரிகளுடனான ஆலோசனை பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘செவ் வாய்க்கிழமை (இன்று) காலை 10 மணிக்கு சட்டப் பேரவை கூட்டம் தொடங்கும். முதலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அவரைத் தொடர்ந்து அமைச் சர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப் படும். பின்னர், அகர வரிசைப்படி எம்எல்ஏக்கள் பதவியேற்பர். கரோனா தொற்றால் பங்கேற்க முடியாதவர்கள் வேறொரு நாளில் பதவியேற்க ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்.

எம்எல்ஏக்கள் பதவியேற்பு முடிந்தும் சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் நாளை நடக்க உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in