தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி, ரெம்டெசிவிர் உள்ளிட்ட கரோனா தடுப்பு மருந்துகளை விரைவாக விநியோகிக்க வேண்டும்: மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி, ரெம்டெசிவிர் உள்ளிட்ட கரோனா தடுப்பு மருந்துகளை விரைவாக விநியோகிக்க வேண்டும்: மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேசிய நிபுணர் குழு தனது பரிந்துரைகளை அளிக்கும் வரை தமிழகம், புதுச்சேரிக்கு தேவையான ஆக்சிஜன், தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்துக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன், வென்ட்டிலேட்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ‘இந்து தமிழ் திசை’நாளிதழில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நடந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் நேற்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, சுகாதாரத் துறையின் அறிக்கையை தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது கூடுதலாக 12 ஆயிரம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்குதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய பிறகு தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 419 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்துக்கு 475 மெட்ரிக் டன் தேவை எனும் சூழலில் மத்திய அரசின் இந்த ஒதுக்கீடும் பற்றாக்குறையாகவே உள்ளது. 3.50 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்து கோரிய நிலையில் இதுவரை 2.05 லட்சம் குப்பி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

18-45 வயதினருக்காக 13.85 லட்சம் டோஸ் மருந்துக்கு ஆர்டர் கொடுத்துள்ள நிலையில் அதில் 5 லட்சம் டோஸ் பெறப்பட்டுள்ளது.

12 மாவட்டங்களில் சித்தா, ஆயுர்வேதா மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் தொடர்பாக பரிந்துரைகளை வழங்க உச்ச நீதிமன்றம் தேசியநிபுணர் குழு அமைத்துள்ளது.

இவ்வாறு தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் ராணுவ தளவாட ஆராய்ச்சிமையமான டிஆர்டிஓ உதவியுடன் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள தேசிய நிபுணர் குழு தனதுபரிந்துரைகளை அளிக்கும் வரைதமிழகம், புதுச்சேரிக்கு தேவையான ஆக்சிஜன், தடுப்பூசிகள்,ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்துக்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் மே 12-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

அரசின் பணிகளில் நீதிபதிகள் திருப்தி

வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள், ‘‘தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தற்போதுள்ள இக்கட்டான சூழலில் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனை இடமாற்றம் செய்யாமல், கரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. தமிழக அரசின் கரோனா தடுப்பு பணிகள் திருப்திகரமாக உள்ளது’’ என்று கருத்து தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in