

மதுரை ஆவினில் ரூ. 13.71 கோடிவரை நடந்த முறைகேடு தொடர்பாக, 2 உதவி மேலாளர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை ஆவினில் 2020 ஏப்ரல்முதல் 2021 மார்ச் வரை பொதுமேலாளராக ஜனனி சவுந்தர்யா என்பவர் பொறுப்பு வகித்துள்ளார். இக்காலகட்டத்தில் பால், நெய், வெண்ணெய் உற்பத்தி செய்து விற்றதில், போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதன்மூலம் ஆவின் நிர்வாகத்துக்கு இழப்புஏற்படுத்தியதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, ஜனனி சவுந்தர்யாபணியிட மாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும், கூடுதல் பொது மேலாளர் பொறுப்பு வகித்த ராமநாதன் என்பவர் தலைமையிலான குழுநடத்திய விசாரணையில், நெய் விற்பனையில் மட்டுமே ரூ.5.60 கோடி வரை முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக சென்னைதுணைப் பொதுமேலாளர் (பால் வளம்) அலெக்ஸ் என்பவர்தலைமையிலான குழுவினர்நடத்திய விசாரணையில், ஆவினுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் கூட்டு சதி செய்து ரூ.13.71 கோடி வரை முறைகேடு செய்திருப்பதாக அறிக்கை அளித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட பொறியியல் பிரிவு உதவி பொது மேலாளர்கள் கிருஷ்ணன், சேகர் ஆகியோரை ஆவின் நிர்வாக ஆணையர் நந்தகோபால் பணியிடை நீக்கம் செய்தார்.
இந்த முறைகேடுக்கு உடந்தையாக இருந்ததாக, பால் பதப்படுத்தும் பிரிவு மேலாளர் மணிகண்டன், தரக்கட்டுப்பாடு துணை மேலாளர் வினிதா, விற்பனைப் பிரிவு விரிவாக்க அலுவலர் மாயக்கண்ணன் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பொது மேலாளர்ஜனனி சவுந்தர்யாவிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்தது.