

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆவடி அரசு மருத்துவமனை, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நசரத்பேட்டைதனியார் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
ஆய்வின்போது அமைச்சர்மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் நாள்தோறும் 1,300 பேர் வரை கரோனா தொற்று ஏற்படுகிறது. தற்போது, 5,309 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1.98 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆவடி அரசு மருத்துவமனையில் இதுவரை பொது மருத்துவம் மட்டுமே பார்த்து வந்த நிலையில், தற்போது அங்குள்ள 50 படுக்கைகளில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஆவடி அரசு மருத்துவமனையில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட உள்ளது.பூந்தமல்லி அரசு மருத்துவமனையிலும் விரைவில் 100 படுக்கைகளில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
திருவள்ளூரில் விரைவில் சித்த மருத்துவ மையம் ஏற்படுத்தப்படும். திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என்பது தவறான செய்தி. இம்மருத்துவமனையில் 64.48 கிலோ லிட்டர் ஆக்சிஜனும், ரெம்டெசிவிர் மருந்து 936 குப்பிகளும் கையிருப்பில் உள்ளன.
தமிழகத்தில் 142 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அவை ஒவ்வொன்றும் ரூ.16 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளன. அதுமட்டுமல்லாமல், பெரம்பலூர், விருதுநகர், நீலகிரி மாவட்டங்களில் தலா ரூ.60 லட்சம் மதிப்பில் பெரிய அளவிலான ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நாளை (இன்று) அல்லது நாளை மறுநாள் (நாளை) ஆக்சிஜன் கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தஆய்வின் போது, பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர், திருவள்ளூர், பூந்தமல்லி எம்எல்ஏக்களான வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.