கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சென்னை அண்ணாநகரில் உள்ள மனுநீதி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் முனிராஜா தாக்கல் செய்த மனுவில், “சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளும், குப்பைகள், திடக் கழிவுகள் ஆகியவற்றை கொட்டியதுமே இதற்கு காரணம். எனவே, ஆறுகள் மற்றும் ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருப்பதற்காக ஆறுகளின் இருபுறமும் தடுப்பு வேலி அமைக்கவும், குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கவும், மீண்டும் வெள்ளம் வந்தால் மழைநீர் தடையில்லாமல் கடலுக்குப் போய்ச் சேர்வதை உறுதி செய்யவும் உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு:-

ஏரிகள், ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் கொட்டுவதையும் உடனடியாகத் தடுக்க வேண்டும். இனிமேல் ஆக்கிரமிப்புகள் செய்வதையும், குப்பைகள் கொட்டுவதையும் தடுக்க ஏரிகள், ஆறுகளில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.

நீர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பொருத்தவரை நிபுணர்கள் குழுவை அமைத்து, சென்னை வழியே ஓடும் ஏரிகளின் பூகோள அமைப்பு குறித்து ஆய்வு நடத்தி, அவற்றின் நீர்வழித் தடங்கள் அந்தக் காலத்தில் எப்படி இருந்தன என்று கண்டுபிடிக்க வேண்டும். வெள்ள காலத்தில் மழைநீர் தங்குதடையில்லாமல் வடிந்து கடலுக்குப் போகும் வகையில் அந்த நீர்வழித் தடங்களை மீண்டும் உருவாக்குவது குறித்து குழு பரிந்துரைக்க வேண்டும். இந்த விவரங்களை பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும்.

அண்மையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், ஏரிகள் மற்றும் ஆறுகளில் குவிந்துள்ள மண் மற்றும் கழிவுகளைத் தூர் வார வேண்டும். இதையும் உடனடியாகச் செய்ய வேண்டும். இதுபற்றியும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும். தூர் வாரும்போது கிடைக்கும் மண்ணை விவசாயத்துக்குப் பயன்படுத்துவது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்த வழக்கு தடையாக இருக்காது. பதில் மனுவை நான்கு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இவ்வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 9-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in