

கரோனா பரவ வாய்ப்பிருப்பதால் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறையை தற்காலிகமாக நிறுத்திவைக்க ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ரேஷன் கடைகளில் மோசடியைத் தடுக்க கைரேகைப் பதிவுமுறை அமல் படுத்தப்பட்டது. மாநிலத்தில் கரோனா 2-ம் அலை பரவல் தீவிரமாக உள்ளது. ரேஷன்கடைகளுக்கு தினமும் 200 பேர் வரை வருகின்றனர். ஒருவரின் கைரேகை பதிவானதும், அடுத்தவரின் கைரேகை பதிவு செய்வதற்கு முன்பு அந்த கருவியை சுத்தம் செய்ய கிருமி நாசினி பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. ஒருமுறை விரல் ரேகை பதிவாகாவிட்டால், ரேகை பதிவாகும் வரை அந்த நபரின் மற்ற விரல்களும் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது எந்த ஊரில் குடும்ப அட்டை வாங்கியிருந்தாலும், குடியிருக்கும் ஊரில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கலாம் என்பதால், வெளியூர் நபர் களும் ரேஷன் கடைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் கரோனா பரவ அதிக வாய்ப்பிருப்பதால் தற்காலிகமாக கைரேகை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என ரேஷன் பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணி யாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலர் ஆ.ம.ஆசிரியதேவன் கூறியதாவது, கரோனா காலத்தில் ரேஷன் பணியாளர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். தற்போது கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கடுமையாக உள்ளது. தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. தற்போது ரேஷன் கடைகளில் கைரேகை பதிந்து ரேஷன் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை வழங்கும் நடைமுறை உள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களின் கைகளை பிடித்து ரேகை பதிவு செய்வதால் தொற்றுக்கு ஆளாகும் அச்சம் பணியாளர்கள் மத்தியில் உள்ளது. இணைய சேவை சரியாகக் கிடைக்காத சூழலில் கைரேகை பதிவு மூலம் நிவாரணம் வழங்குவதில் தேவையற்ற தாமதமும் ஏற்படுகிறது.
எனவே, கரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் காலம் வரையிலும், கைரேகை பதிவு இல்லாமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் மற்றும் நிவாரணம் வழங்கும் பணி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.