Published : 03 Jun 2014 08:12 AM
Last Updated : 03 Jun 2014 08:12 AM

வருமானமில்லாத இளைஞர்களை வளைக்கும் இடைத்தரகர்கள்: செம்மரக் கடத்தலில் ‘பலிகடா’ ஆக்கப்படும் கொடுமை

வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களை இடைத்தரகர்கள் எளிதாக வளைத்து, செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், செம்மரம் வெட்டி கடத்தும் கும்பலைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். அவர்கள் மூவரும், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள தானியார் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகன் விஜயகாந்த் (28), செல்வராஜ் மகன் வெங்கடேசன் (25), சேட்டு மகன் சிவா (25) ஆவர். இணைபிரியாத நண்பர்களான மூவரும், ஒன்றாகவே உயிரிழந்துவிட்டனர் என்று அவர்களது குடும்பத்தினரும், கிராம மக்களும் சோகத்துடன் கூறுகின்றனர்.

கேரள மாநிலத்தில் கூலி வேலைக்குச் செல்வதாக, பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற மூவரும், துப்பாக்கிச் சூட்டில் பலியானதை, வெள்ளிக்கிழமை நாளிதழ்களில் வெளியான புகைப் படத்தை பார்த்துத்தான், அவர் களது குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். இதையடுத்து காவல்துறை அறிவுரைபேரில் வழக்கறிஞர் ஒருவருடன், திருப்பதிக்கு சென்று அவர்களின், சடலங்களை அடையாளம் காட்டி சனிக்கிழமை மீட்டு வந்து இறுதி சடங்கு செய்துள்ளனர். அவர்களுக்கு துணையாக, 2 போலீஸார் உடன் சென்றுள்ளனர். துயரத்தில் இருந்து, அவர்களால் மீள முடியவில்லை.

குழந்தைகள் மீது மிகுந்த பாசம்

விஜயகாந்தின் தந்தை சங்கர் கூறுகையில், “என் மகனுக்கு பவித்ரா என்ற மனைவியும், கோபிகா (3), யோகேஸ்வரி (ஒன்றரை வயது) என்ற இரு மகள்களும் உள்ளனர். எனக்கு ஒரே மகன். கரும்பு வெட்டி, குடும்பம் நடத்தி வந்தான். மழை இல்லாத காரணத்தால், விவசாயம் நலிந்துவிட்டது.

கரும்பு வெட்டும் பணியும் முடிந்ததால், வேலையில்லை. அதனால், கேரளாவுக்கு கூலி வேலைக்கு செல்வதாகக் கூறி, மே 23-ம் தேதி சென்றான். வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற பிறகு, எங்களை தொடர்பு கொள்ளவில்லை. அவனது செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயன்றும், பலனில்லை. அவனுக்கு குழந்தைகள் மீது மிகுந்த பாசம். அந்த குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிட்டான். அவனை, மரம் வெட்ட அழைத்து சென்றது யார்? என்று தெரியவில்லை. இப்போதுதான் முதல் முறையாக வெளியூர் சென்றான்” என்றார்.

வெங்கடேசன் தாயார் பூமல்லி கூறுகையில், “கேரளாவில் நடைபெறும் கட்டிட தொழிலில் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தான். எங்களுக்கு அவன், ஒரே மகன். இப்போது எங்களை ஆனாதையாக விட்டுவிட்டு சென்றுவிட்டான். அவனை அழைத்து சென்றவர்கள் குறித்து எதுவும் தெரியாது” என்றார்.

ரூ.500 மிச்சப்படும் என்றான்

சிவா தந்தை சேட்டு கூறுகையில், “என்னுடைய இளைய மகன் சிவா. அவனுக்கு திருமணமாகி லேகா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் சசிரேகா என்ற குழந்தையும் உள்ளனர். கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு சென்றான். ஒரு நாளுக்கு ரூ.200-தான் கிடைக்கின்றது. கேரளாவுக்கு சென்றால் ஒரு நாளைக்கு ரூ.600 வரை கிடைக்கும். 100 ரூபாய் சாப்பாட்டுக்கு போனால் கூட, மீதம் ரூ.500 இருக்கும் என்று கூறி மே 23-ம் தேதி சென்றான். அவன் செல்லும்போது, கடன் வாங்கி ரூ.1,000 கொடுத்து அனுப்பினேன். அவனை அழைத்து சென்றது யார்? என தெரியவில்லை. அவன் செல்லும்போது இரு சக்கர வாகனத்தில் சென்றான். அந்த வாகனம் எங்கு உள்ளது என தெரியவில்லை” என்றார்.

உட்கார்ந்த இடத்தில் பண மழை

மலைகிராம சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்கு, ஜவ்வாது மலையில் இருந்து இடைத்தரகர்கள் மூலமாக ஆயிரக்கணக்கானோர் செல்கின்றனர். ஒரு கிலோ செம்மரம் வெட்டி எடுத்துச் சென்று கொடுத்தால் ரூ.300 கிடைக்கும். இடைத்தரகருக்கு ரூ.50 கிடைக்கும்.

ஒரு நபர், ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 20 கிலோ முதல் 40 கிலோ வரை வெட்டுவதாக கூறப்படுகிறது. இடைத்தரகர்களுக்கு வீடு தேடி பணம் வருமாம். ஒரு இடைத்தரகர் 50 பேரை அனுப்பி வைத்தால் உட்கார்ந்த இடத்திலேயே அவர்களுக்கு அதிக பணம் கிடைக்கும். 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் வெளியானதும், இங்குள்ள இடைத்தரகர்கள் தலைமறைவாகி விட்டதாகவும், அவர்களது செல் போன் எண்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப் படுகிறது.

மூவரின் செல்போன்களில் பதிவான அழைப்புகள் மூலமாக விசாரணை நடத்தினால், இடைத்தரகர்களை அடை யாளம் காணலாம். அவர்களை கைது செய்யாவிட்டால், அப்பாவி இளைஞர்களின் மரணம் தொடர் கதையாகிவிடும். மூவரும் நண்பர்கள் என்றாலும், நண்பருடன் செல்வதாக ஒருவரும், தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூறவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வருமானத்துக்கு கஷ்டப்படும், மலை கிராம இளைஞர்களை இடைத் தரகர்கள் எளிதாக வளைத்து விடுகின்றனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x