

மதுரை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 79 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
பெண் கல்வி, உடல்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 18 வயதுக்கு மேல் தான் பெண்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என 2006-ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி சமூக நலத் துறை, சைல்டுலைன் அலுவலர்கள் பல்வேறு குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் ஏழ்மை, விழிப்புணர்வு இல்லாமை, உறவுநிலை போன்ற காரணங்களால் குழந்தை திருமணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன.
இது குறித்து மதுரை மாவட்ட சமூக நலத்துறை மற்றும் குழந்தை திருமண தடுப்பு அலுவலர் ஆனந்த வல்லி கூறியதாவது:
2010-ம் ஆண்டில் இருந்து தான் குழந்தை திருமணங்கள் குறித்து எங்களுக்கு தகவல்கள் வர ஆரம்பித்தன. கல்வி நிலையங்கள், பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக தற்போது பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
காவல் துறை, சைல்டுலைன், ஆட்சியர் அலுவலகம், சமூக நலத்துறை அலுவலகம் மூலமாக எங்களுக்கு குழந்தை திருமணம் குறித்த தகவல்கள் வருகின்றன. அதன் அடிப்படையில் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்துகிறோம். அப்போது பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியடையாமல் இருந்தால் குழந்தை திருமணமாகக் கருதி திருமணத்தை தடுத்து நிறுத்து கிறோம். பின்னர் சம்பந்தப்பட்ட பெண் குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.
2010-ம் ஆண்டு முதல் இதுவரை 185 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 61 திருமணங்கள் நிறுத்தப்பட்டன. இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை 75 திருமணங்களும், டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 4 திருமணங்களும் என 79 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் தான் குறைந்தது 10 திருமணங்கள் தடுக்கப்படுகின்றன. அதற்கு அடுத்தபடியாக சேடபட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றியங்களிலேயே அதிக குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
குறைந்த வயதில் திருமணம் முடிந்தால் உடல், மன ரீதியாகப் பல்வேறு பாதிப்புகளை அந்த குழந்தைகள் அடைகின்றனர் எனத் தெரிந்தும் சிறு வயது திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. எனவே குழந்தை திருமணங்கள் நடக்காமல் இருக்க பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.