Published : 11 May 2021 03:12 AM
Last Updated : 11 May 2021 03:12 AM

பொதுமக்கள் ஒத்துழைப்புடன் முழு ஊரடங்கு: நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் சாலைகள் வெறிச்சோடின

முழு ஊரடங்கு காரணமாக பேருந்துகள், வாகனங்கள் இயங்காததால் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றுப்பாலங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. (அடுத்த படம்) திருநெல்வேலி டவுன் ஆர்ச் வழியே நேற்று பகல் 12 மணிக்கு மேல் வந்தவர்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். (கடைசி படம்) தூத்துக்குடியில் வட மாவட்டங்களுக்கான பேருந்துகள் புறப்படும் புதிய பேருந்து நிலையம் ஆள் அரவமின்றி காணப்பட்டது. படங்கள்: மு.லெட்சும் அருண், என்.ராஜேஷ்.

திருநெல்வேலி/ தென்காசி/ தூத்துக்குடி/ கோவில்பட்டி/ நாகர்கோவில்

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்றுமுதல் அமலான முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். சாலைகள் வெறிச்சோடியிருந்தன.

திருநெல்வேலி மாவட்டத்தில் பேருந்துகளும், ஆட்டோ, கார், வேன், மினி லாரிகளும் இயக்கப்படவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் சீருடைப் பணியாளர்கள் பணிக்குசெல்ல மட்டும் குறிப்பிட்ட வழித்தடங்களில் காலையும், மாலையும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வசதியாக பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலையில் 12 மணி வரையில் இந்த கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கிச் சென்றனர். கடைகள் அடைக்கப்பட்டபின் பொதுமக்கள் நடமாட்டமும், இருசக்கர வாகன போக்குவரத்தும் அவ்வளவாக இருக்கவில்லை.

திருநெல்வேலியில் எப்போதும் மக்கள்நடமாட்டம் அதிகம் இருக்கும் டவுன் ரதவீதிகள், பேட்டை பஜார், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, மேலப்பாளையம் சந்தை பகுதிகள் வெறிச்சோடின.

தென்காசி

முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் மதியத்துக்கு மேல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தென்காசியில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை காய்கறி, பலசரக்கு, மளிகைக் கடைகள், டீக்கடைகள், இறைச்சி, மீன் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்க அனுமதிக்கப்பட்டது. மருந்துக் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

மதியம் வரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவான அளவில் இருந்தது. அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்காக அரசுப் பேருந்துகள் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் சென்றன.

அரசு, தனியார் பேருந்துகள், வாடகைக் கார்கள் இயங்காததால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. மதியத்துக்கு மேல் சாலைகள், கடைவீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதிகள், பேரூராட்சிகள், ஊரகப் பகுதிகளிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தூத்துக்குடி

ஊரடங்கு அமலானதால் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வணிக நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், டீக்கடைகள், சிறு பெட்டிக்கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட்டன. அதன் பிறகு மருந்து கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன.

நேற்று அதிகாலை முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை. ஆட்டோ, டாக்சி, வேன் போன்ற வாடகை வாகனங்களும் இயங்கவில்லை. இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட சொந்த வாகனங்கள் வழக்கம்போல் இயங்கின.

பேருந்துகள் ஓடாததால் பேருந்து நிலையங்கள் தற்காலிக காய்கறி சந்தைகளாக மாற்றப்பட்டன. தூத்துக்குடி காமராஜ் காய்கறி சந்தையில் உள்ள பெரும்பாலான கடைகள் பழைய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டன. உழவர் சந்தையில் ஒரு பகுதி கடைகள் புதிய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதிக்கு மாற்றப்பட்டன.

காவல் துறையினர் சோதனைச் சாவடிகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். டிரோன் கேமரா மூலம் மக்கள் கூட்டத்தை காவல் துறையினர் கண்காணித்தனர். எஸ்பி ஜெயக்குமார் தூத்துக்குடி காமராஜ் காய்கறி சந்தை, பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையை பார்வையிட்டு, கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அரசு ஊழியர்களுக்காக இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் மட்டும் காலையில் இயங்கின. அதன் பின்னர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இறுதி சடங்குகளில் கலந்துகொள்வோர் செல்லும் வாகனங்களை போலீஸார் அனுமதித்தனர். மோட்டார் சைக்கிள்களில் சுற்றியவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன,

நாகர்கோவில்

முழு ஊரடங்கால் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய தேவைக்கானவர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டனர்.

எப்போதும் பரபரப்பாக இயங்கும் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம், வடசேரி பேருந்து நிலையம் ஆகியவை பேருந்துகள் மற்றும் பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. இதுபோல் மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், கருங்கல், திங்கள்நகர், குலசேகரம், களியக்காவிளை உள்ளிட்ட அனைத்து பேருந்து நிலையங்களும் ஆள் அரவமின்றி இருந்தன. காலையில் இருந்து மதியம் 12 மணி வரை மளிகைக்கடை, காய்கறி கடைகள் இயங்கின. இவற்றில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் காணப்பட்டது.

அனைத்து வாகனப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டதால் கேரளாவுக்கு செல்லும் வர்த்தகம் ழுமையாக முடங்கியது. தோவாளை மலர் சந்தை, குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகங்கள் ஆகியவற்றில் வர்த்தகம் நடைபெறவில்லை. ரப்பர், தேன், தேங்காய், வாழைத்தார் விற்பனையும் முடங்கியது. கூலித் தொழில் செய்பவர்கள் மற்றும் பிற பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குச் செல்லாமல் வீடுகளில் முடங்கினர். கன்னியாகுமரி, திற்பரப்பு உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா மையங்கள் வெறிச்சோடின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x