Published : 02 Dec 2015 09:30 PM
Last Updated : 02 Dec 2015 09:30 PM

சென்னையில் மக்களை மீட்கும் பணிகள் தீவிரம்; காஞ்சி மீட்பில் தொடரும் சிரமம்

கடற்படை உதவி கோரிய சென்னை மாநகராட்சி

சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிய பொதுமக்களைக் காப்பாற்ற மாநகராட்சி நிர்வாகம் தமிழக அரசு மூலமாக கடற்படை உதவியை கோரியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்த கனமழையால் மாநகரம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின் படி சென்னையில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 29 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பல இடங்களில் தேங்கியிருப்பதாலும், தாம்பரம், கேளம்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகியவற்றில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எழும்பூர் ரயில் நிலையம் அருகே மற்றும் பல்வேறு இடங்களில் அரசு மாநகரப் பேருந்துகள் மழை வெள்ளத்தின் நடுவே பழுதாகி நிற்கின்றன.

மாநகராட்சி பராமரிப்பில் உள்ள 16 சுரங்கப் பாதைகள், நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள 6 சுரங்கப் பாதைகள், 12 சுரங்க நடைபாதைகள் என அனைத்திலும் நீர் தேங்கி மாநகருக்குள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழைநீரில் வீடுகள் மூழ்கியிருப்பதால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தொலைத் தொடர்பு சேவைகள், ஏடிஎம் சேவைகள் முடங்கியுள்ளன. சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை அமைந்துள்ள வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது.

போக்குவரத்து துண்டிப்பு, மாநகராட்சி அலுவலகத்துக்கு ஊழியர்கள் வரமுடியாத சூழல், வந்தாலும் மழைநீர் தேங்குவதால் அலுவலகத்துக்குள் செல்ல முடியாத நிலை, தொலைத் தொடர்பு துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாநகராட்சியின் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகள் முடங்கியுள்ளன. அந்தந்த மண்டலங்களின் நிலவரங்களை பெறுவதிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் மழை வெள்ளத்தால் சூழ்ந்த பகுதியில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணியில் மீனவர்களின் படகுகள் மற்றும் தீயணைப்பு துறையின் படகுகள் என மொத்தம் 104 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அனைத்து கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் மழை வெள்ளம் பாய்வதால், அவற்றின் கரையோரம் வசித்து வந்தவர்கள், தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் வெளியேறியவர்கள் என சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், 140-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகரப் பகுதியில் சைதாபேட்டையிலுள்ள ஜாபர்கான்பேட்டையில் மழை வெள்ளம் சூழ்ந்து அதிக அளவிலான மக்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. மாநகரம் முழுவதும் வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்க தமிழக அரசு மூலமாக மாநகராட்சி நிர்வாகம் கடற்படை உதவியை கோரியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பதில் சிரமம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணிகளில் ராஜாளி கப்பற்படையினர் ஈடுபட்டுள்ளனர். எனினும், சாலைகள் துண்டிப்பு, அதிகளவிலான தண்ணீர், தகவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள இடர்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூறியதாவது: வெள்ளத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் வருவாய்த்துறை உள்பட அனைத்து துறை பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு பகுதியில் தீயணைப்புத் துறை மற்றும் போலீஸார் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த அரசு மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் வேறு மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளேன். சாலைகள் மற்றும் தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளால், மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ராஜாளி கடற்படையினருக்கு உதவியாக 30 படகுகள் வழங்கப்பட்டுள்ளன. என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x