Last Updated : 10 May, 2021 09:58 PM

 

Published : 10 May 2021 09:58 PM
Last Updated : 10 May 2021 09:58 PM

புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமனம்

புதுச்சேரி

புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த 7-ம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.

இதையடுத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் விரைவில் பொறுப்பேற்க உள்ளனர். இதனிடையே புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மத்திய உள்துறை மூலம் நேரடியாக நியமிக்கப்படும் 3 நியமன எம்ஏல்ஏக்கள் நியமிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பெயர் பட்டியலும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கே.வெங்கடேசன், விபி.ராமலிங்கம் மற்றும் ஆர்.பி.அசோக் பாபு உள்ளிட்ட‌ மூன்று பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதம் புதுச்சேரி தலைமைச் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நியமன எம்எல்ஏக்கள் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் கே.வெங்கடேன் கடந்த 2019-ல் தட்டாஞ்சாவடி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த பிப்ரவரி மாதம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழக்க காரணமாக அமைந்தார். பின்னர் அவர் பாஜகவில் இணைந்தார்.

விபி.ராமலிங்கம் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்து பதவியை ராஜினாமா செய்த சிவக்கொழுந்துவின் இளைய சகோதரர் ஆவார். இவரும் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார்.

ஆர்.பி.அசோக் பாபு புதுச்சேரி பாஜக நகர மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டிருப்பது தேஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x