Last Updated : 10 May, 2021 08:46 PM

 

Published : 10 May 2021 08:46 PM
Last Updated : 10 May 2021 08:46 PM

புதுச்சேரியில் ஆம்புலன்ஸ்கள், சவ ஊர்திகளுக்கான கட்டணம் நிர்ணயம்

புதுச்சேரியில் ஓட்டப்படும் ஆம்புலன்ஸ்கள், சவ ஊர்திகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் இன்று (மே. 10) வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

‘‘புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதின் காரணமாக, ஆம்புலன்ஸ் மற்றும் சவ ஊர்திகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி ஆம்புலன்ஸ் மற்றும் சவ ஊர்திகளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பொதுமக்களிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ், சவ ஊர்திகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு நியாயமான கட்டணத்தை போக்குவரத்துத் துறை நிர்ணயம் செய்துள்ளது. மாருதி, ஆம்னி போன்ற சிறிய வகை ஆம்புலன்ஸ் மற்றும் சவ ஊர்திகள் கட்டணம் முதல் 10 கி.மீ. வரை ரூ.500, 10 முதல் 50 கி.மீ. வரை உள்ள தூரத்துக்குக் கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.20, 50 கி.மீ.க்கு மேல் உள்ள தூரத்துக்குக் கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.12 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர, டாடா ஸ்பாசியோ, டாடா சுமோ, மடாடர் போன்ற ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ. வரை ரூ.600, 10 முதல் 50 கி.மீ. வரை கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.24, 50 கி.மீ.க்கு மேல் கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.13 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெரியவகை அடிப்படை உயிர்காக்கும் கருவிகளின் வசதிகள் அல்லாத வாகனங்களான டாடா 407, டாடா விங்கர், சுவராஜ் மஸ்தா, போர்ஸ் டிராவ்லர், டெம்போ டிராவ்லர் போன்ற ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முதல் 10 கி.மீ. வரை உள்ள தூரத்துக்கு ரூ.700, 10 முதல் 50 கி.மீ. வரை கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.32, 50 கி.மீ.க்கு மேல் உள்ள தூரத்துக்கு கூடுதலாக கி.மீ.க்கும் ரூ.16 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, நவீன உயிர்காக்கும் கருவிகள் வசதிகளுடன் கூடிய வாகனங்களான போர்ஸ் டிராவ்லர், டெம்போ டிராவ்லர், சுவராஸ் மஸ்தா போன்ற ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முதல் 10 கி.மீ. வரை ரூ.850, 10 முதல் 50 கி.மீ. வரை தூரத்துக்கு கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.41, 50 கி.மீ.க்கு மேல் உள்ள தூரத்துக்குக் கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்துதல், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவப் பணியாளர்களுக்கான கட்டணங்கள் அல்லாமல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய கட்டணத்தைத் தவிர்த்து, அதிகப்படியான கட்டணத்தை ஆம்புலன்ஸ் மற்றும் சவ ஊர்தி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வசூலித்தால் மோட்டார் வாகனச் சட்டம் 1988இன் கீழ் முதல் முறை குற்றத்துக்கு ரூ.200, 2-வது முறை குற்றம் அல்லது அதற்கு மேல் ரூ.500 மற்றும் பிரிவு 178 (3) ஏவின் கீழ் ரூ.500 என வசூலிக்கப்படும். மேலும், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’’.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x