

சிட்கோ தொழிற்பேட்டைகளில் செயல்படும் தொழில் நிறுவனங்களில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென, அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 10) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கு உதவும் வகையில், தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதிலும், பெரும்பங்கு வகிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் ஆய்வுக்கூட்டம் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கிண்டியிலுள்ள சிட்கோ தலைமை அலுவலகத்தில் 10.05.2021 அன்று நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமை ஏற்று நடத்தி, ஆய்வு செய்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுரைகள் வழங்கினார். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அதை எதிர்த்து மேற்கொள்ளும் யுத்தத்தில், தேவையான உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் தொடர்ச்சியாக இயங்கும் தொழில் நிறுவனங்கள் நன்கு செயல்பட்டு அரசுக்கு உதவி வருகின்றன எனவும், அந்நிறுவனங்களுக்குத் தேவையான நிதியுதவி உட்பட, அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் எனவும் உறுதி கூறினார்.
தமிழ்நாடு சிட்கோவானது, 1970ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை 122 தொழிற்பேட்டைகளை உருவாக்கிச் சிறப்பாக நிர்வகித்து வருகிறது.
இப்பேரிடர் காலத்தில், தமிழ்நாட்டிலுள்ள சிட்கோ தொழிற்பேட்டைகளில் செயல்படும் தொழில் நிறுவனங்களில் பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு அரசின் பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொரு தொழில் நிறுவனத்திற்கும் அறிவுறுத்தி அதனைத் தவறாமல் கடைப்பிடிக்கவும், பெருந்தொற்று பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், இத்தொழிற்பேட்டைகளில் செயல்படும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடும் வகையில் தொழிற்பேட்டைகள் / அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தி, அனைத்துப் பணியாளர்களையும் பெருந்தொற்றிலிருந்து காக்க வேண்டுமென்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழகத்தில் புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதிலும், தொழில் புரிந்துவரும் தொழில் முனைவோருக்கும் தேவையான பயிற்சி வகுப்புகள், தொழில் சிந்தனை உருவாக்கத்திற்கான கூட்டங்கள், சவால்களை எதிர்நோக்கும் பயிற்சி எனத் தொடர்ந்து தொழில் முனைவோருக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. தொழில் முனைவோருக்குத் தங்கள் தொழிலில் வெற்றி பெற, வழிகாட்டுதல்கள், பயிற்சிகள், நிதி ஆதாரம் போன்ற உதவிகள் அதிகம் தேவைப்படுகின்றன.
தொழில் ஆணையரகம், சிட்கோ, டான்சி, இடிஐஐ மற்றும் எம்-டிப் ஆகிய துறைகள் குறித்த விரிவான விளக்கப்படக் காட்சி காண்பிக்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது, கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தொழில் முனைவோர் சந்திக்கும் இன்னல்களைக் களைய புதிய உத்திகள் வகுத்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து, தொழில் துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ செயல்படுமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.