Last Updated : 10 May, 2021 06:52 PM

 

Published : 10 May 2021 06:52 PM
Last Updated : 10 May 2021 06:52 PM

தமிழக ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுமா? கரோனா அச்சத்தில் பணியாளர்கள்

மதுரை

கரோனா பரவ வாய்ப்பிருப்பதால் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறையில் பொருட்கள் வழங்கும் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கடைப் பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் ரேஷன் கடைகளும், மதுரை மாவட்டத்தில் 800 ரேஷன் கடைகளும் உள்ளன. குடும்ப அட்டைகள் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்ட பிறகு ஸ்மார்ட் கார்டுகள் அதற்கான கருவியில் ஸ்கேன் செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டது. இம்முறையில் யார் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.

இதில் மோசடியை தடுக்க குடும்ப அட்டைதாரர்களே ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க கைரேகை பதிவு முறை அமல்படுத்தப்பட்டது.

இம்முறையில் குடும்ப அட்டையில் இடம் பெற்றிருப்பவர்களில் யாராவது ஒருவர் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று கைரேகை பதிவு செய்த பிறகே பொருட்கள் வாங்க முடியும்.

இந்த முறையில் தான் அனைத்து ரேஷன் கடைகளிலும் தற்போது பொருட்கள் வழங்கப்படுகின்றன. குடும்ப அட்டைதாரர்களின் கைரேகை பல ஆண்டுக்கு முன்பு ஆதார்கார்டு எடுக்கும் போது பதிவானதால், தற்போது அவர்களின் கைரேகை சரியாக பதிவாவதில்லை. இதனால் ரேஷன் கடை பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் கை விரல்களை அழுத்திப் பிடித்து கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வழங்குகின்றனர்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமாக உள்ளது. பரவலை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைவரும் முககவசம் அணிதல், அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளுக்கு தினமும் 200 பேர் வரை பொருட்கள் வாங்க வருகின்றனர். ஒருவரின் கைரேகை பதிவானதும், அடுத்தவரின் கைரேகை பதிவு செய்வதற்கு முன்பு அந்த கருவியை சுத்தம் செய்ய கிருமி நாசினி எதுவும் பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

சாதாரண துணியை கொண்டு துடைத்துவிட்டே கைரேகை பதிவு நடைபெறுகிறது. ஒரு முறை விரல் ரேகை பதிவாகாவிட்டால், ரேகை பதிவாகும் வரை அந்த நபரின் அடுத்தடுத்து விரல்களும் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது எந்த ஊரில் குடும்ப அட்டை வாங்கியிருந்தாலும், குடியிருக்கும் ஊரில் உள்ள ரேசன் கடைகளில் பொருட்களை வாங்கலாம் என்பதால், வெளியூர் நபர்களும் ரேசன் கடைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் கரோனா பரவுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதால் தற்காலிகமாக கைரேகை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ரேசன் கடை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் மதுரை மாவட்ட செயலர் ஆ.ம.ஆசிரியதேவன் கூறியதாவது:

கரோனா காலத்தில் மாநிலம் முழுவதும் ரேசன் கடை பணியாளர்கள் சிரமத்துடனும், அச்சத்துடனும் பணியாற்றி வருகின்றனர். தற்போது கரோனா இரண்டாவது அலை தாக்கம் கடுமையாக உள்ளது. தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. தற்போது ரேசன் கடைகளில் கைரேகை பதிந்து ரேஷன் பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்கும் நடைமுறை உள்ளது.

கரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் ரேசன் கடைக்கு வரும் பொதுமக்களின் கைகளை பிடித்து ரேகை பதிவு செய்வதால் தொற்றுக்கு ஆளாகும் அச்சம் பணியாளர்கள் மத்தியில் உள்ளது. இணைய சேவை சரியாக கிடைக்காத சூழலில் கைரேகை பதிவு மூலம் நிவாரணம் வழங்குவதில் தேவையற்ற தாமதமும் ஏற்படுகிறது.

எனவே, கரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் காலம் வரையிலும் கை ரேகை பதிவு இல்லாமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் மற்றும் நிவாரணம் வழங்கும் பணி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x