

கரோனா முழு ஊரடங்கு எதிரொலியாக ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இன்று அதிகாலை 4 மணி முதல் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. இதனால் வழக்கமாகப் பயணிகளின் கூட்டம் மற்றும் பேருந்துகளால் பரபரப்பாக இயங்கி வரும் ஓசூர் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே மாதம் 10-ம் தேதி (இன்று) அதிகாலை 4 மணி முதல் 24-ம் தேதி அதிகாலை 4 மணி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த ஓசூர்- பெங்களுரு (கர்நாடகா மாநில எல்லை அத்திப்பள்ளி வரை) இடையே தினசரி இயக்கப்பட்டு வரும் 20 நகரப் பேருந்துகளும், தமிழகப் பகுதிகளுக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த 400-க்கும் மேற்பட்ட விரைவுப் பேருந்துகளும், ஓசூர் - தேன்கனிக்கோட்டை வட்டத்தில் தினசரி இயக்கப்பட்டு வந்த 80-க்கும் மேற்பட்ட நகர மற்றும் கிராம சேவைப் பேருந்துகளும் இன்று அதிகாலை 4 மணி முதல் இயக்கப்படவில்லை.
இந்த முழு நேர ஊரடங்கு காரணமாகப் பயணிகள் மற்றும் பேருந்துகள் இன்றி ஓசூர் பேருந்து நிலையம் முழுவதும் வெறிச்சொடிக் காணப்பட்டது. கர்நாடகா மாநிலத்திலும் மே 24-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அதுவரை ஓசூர் - பெங்களூரு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த 150-க்கும் மேற்பட்ட கர்நாடக அரசுப் பேருந்துகளின் இயக்கம் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்தது.
தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை
இதற்கிடையே தமிழக ஓசூர் எல்லையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜுஜுவாடி இ-பாஸ் சோதனை மைய அலுவலர் கூறும்போது, ’’மார்ச் 10-ம் தேதி முதல் இங்கு இ-பாஸ் சோதனைச் சாவடி இயங்கி வருகிறது. தற்போது மே 10-ம் தேதி முதல் (இன்று) தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் தமிழக ஓசூர் எல்லை மூடப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு வரும் கர்நாடகா உள்ளிட்ட அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் சோதனை நடத்தப்படுகிறது. இ-பாஸ் இல்லாத வெளி மாநில வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த சோதனைச் சாவடியில் மருந்து, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும் இந்த இ-பாஸ் சோதனைச் சாவடியில் ஓசூர் மாநகராட்சி ஊழியர்கள் மூலமாகத் தமிழகத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேர வாகன சோதனை உள்ளிட்ட பணிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத் துறை, ஓசூர் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.