

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுகவின் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏக்கள் ஆக தேர்வானதை அடுத்து எம்.பி பதவியில் இருந்து இருவரும் விலகியுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் போட்யிட்ட வைத்திலிங்கமும் வெற்றி பெற்றனர்.
இதனால் இவர்கள் தங்களின் எம்.பி. பதவியைத் தக்கவைத்துக் கொள்வார்களா அல்லது அதை ராஜினாமா செய்துவிட்டு சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தொடர்வார்களா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. அதிலும் அதிமுக மட்டும் வெறும் 66 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது.
இதனால், சட்டப்பேரவையில் தங்களின் பலத்தைக் காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுக உள்ளது. இதனால், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுகவின் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி நீண்ட இழுபறிக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இதே கூட்டத்தில்தான் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மாநிலங்களவை உறுப்பினர் ராஜினாமா செய்வர் என்ற முடிவும் எட்டப்பட்டது.
இனி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இருவரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக செயல்படுவர்.
இவர்கள் இருவரும் தத்தம் பதவியை ராஜினாமா செய்வதால், மாநிலங்களவையில் அந்த இடத்தையும் திமுகவே பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.