Last Updated : 10 May, 2021 05:44 PM

 

Published : 10 May 2021 05:44 PM
Last Updated : 10 May 2021 05:44 PM

நெல்லையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பு

படம்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க ஏராளமானோர் திரண்டனர்.

ஆனால் லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு மருந்து வழங்கபடாதால் நீண்ட நேரம் காத்திருந்த நோயாளிகளின் உறவினர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

தமிழகத்தில் கரோனா 2-ம் கட்ட அலையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை அதிகரிக்க அரசு திட்டமிட்டது.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் சென்னையில் முதலில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை நடைபெறுகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மருந்து வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று காலையிலிருந்தே மருந்து வாங்க நோயாளிகளின் உறவினர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

முன்னெச்சரிக்கையாக நுழைவு வாசலில் பாதுகாப்புக்கு போலீஸார் நிறுத்தப்பட்டு உரிய சோதனைக்கு பின்னரே மருந்து வாங்க வரும் நபர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் ஆறு டோஸ் அடங்கிய தொகுப்பு ரூ.9408 -க்கு விற்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு 50 நோயாளிகளுக்கு தலா 6 டோஸ் என மொத்தம் 300 டோஸ்கள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சனிக்கிழமை 26 நோயாளிகளுக்கான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இன்று 74 நோயாளிகளுக்கான மருந்து விற்பனை செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ரெம்டெசிவிர் மருந்து வாங்க வருபவர்கள், நோயாளியின் கரோனா பரிசோதனை சான்று, சிடி ஸ்கேன் பரிசோதனை சான்று, மருத்துவரின் பரிந்துரை சான்று அசல், நோயாளியின் ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், மருந்து வாங்க வரும் நபரின் ஆதார் அட்டையின் நகல் மற்றும் அசல் ஆகிய ஆறு ஆவணங்களை எடுத்து வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி உரிய ஆவணங்களுடன் இன்று நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் மருந்து வாங்கி சென்றனர். இதற்கிடையில் பெரும்பாலான நோயாளிகளுக்கு பாதிப்பு குறைந்த அளவில் இருப்பதால் அவர்களுக்கு மருந்து தேவை இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டனர். நோயாளிகள் உறவினர்கள் கொண்டுவரும் மருத்துவரின் பரிந்துரை சான்றை மருந்து விற்பனை மையத்தில் உள்ள மருத்துவர் பரிசோதித்து அதன் பிறகே மருந்து வழங்கப்படுகிறது.

அந்த சான்றில் லேசான பாதிப்பு என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு இந்த மருந்து தேவையில்லை என்று திருப்பி அனுப்புகிறார்கள். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x