

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வராக மே 7 அன்று மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், உடனடியாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார்.
சென்னை மாநகரக் காவல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டனர். கோவை நகர ஆணையராகப் பதவி வகித்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். முதல்வருக்கு 4 தனிச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர். சென்னை மாநகராட்சி ஆணையரும் மாற்றப்பட்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (மே 10) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
"1. காவல் பயிற்சிக் கல்லூரி சிறப்பு டிஜிபியாகப் பதவி வகிக்கும் ஷகீல் அக்தர், சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. நிர்வாகத்துறை சிறப்பு டிஜிபியாகப் பதவி வகிக்கும் கந்தசாமி, காலியாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3. சிறப்பு அதிரடிப் படையின் (ஈரோடு) ஏடிஜிபியாகப் பதவி வகிக்கும் எம்.ரவி, நிர்வாகத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. உளவுத்துறை ஐஜியாகப் பதவி வகிக்கும் ஈஸ்வரமூர்த்தி, காலியாக இருந்த உளவுத்துறை (உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5. தொழில்நுட்பப் பிரிவின் டிஐஜியாகப் பதவி வகிக்கும் ஆசியம்மாள், காலியாக இருந்த உளவுத்துறை டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
6. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யாகப் பதவி வகிக்கும் அரவிந்தன், குற்றத் தடுப்புப் பிரிவு சிஐடி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
7. தூத்துக்குடி காவலர் பயிற்சிப் பள்ளி எஸ்.பி.யாகப் பதவி வகிக்கும் சரவணன், ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8. மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்த திருநாவுக்கரசு, முதல்வர் பாதுகாப்புப் பிரிவு சிஐடி - எஸ்.பி. 1 ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
9. காவல் நவீனக் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக இருந்த சாமிநாதன், முதல்வர் பாதுகாப்புப் பிரிவு சிஐடி - எஸ்.பி. 2 ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.