

தேனி மாவட்டம் போடிமெட்டு மலைச்சாலையில் ராட்சதப் பாறைகள் சரிந்து விழுந்ததால் தமிழக - கேரள பகுதிகளுக்கான காய்கறி உள்ளிட்ட சரக்கு வாகனப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாக போடிமெட்டு மலைச்சாலை உள்ளது. போடியிலிருந்து 26 கி.மீ. தூரம் நீளம் கொண்ட இந்த மலைச்சாலை 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைஓரத்தில் உள்ள மண்மேடுகள் பிடிப்புத்தன்மை இழந்து ஆங்காங்கே சிறுசிறு மண்சரிவுகள் ஏற்பட்டு வந்தன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 6-வது கொண்டை ஊசி வளைவு அருகே பிஸ்கெட்பாறை எனும் இடத்தில் ராட்சத பாறைகள் மலையில் இருந்து அடுத்தடுத்து உருண்டு சாலையில் விழுந்தன. கேரளாவில் ஊரடங்கு நடைமுறையில் இருந்ததால் வாகனப் போக்குவரத்து இப்பகுதியில் இல்லை. இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
இரவில் இப்பாறையை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டதால் இன்று அதிகாலையில் இவற்றை அப்புறப்படுத்துவதற்கான பணி தொடங்கியது.
பெரிய அளவிலான பாறைகள் என்பதால் விழுந்த அதிர்வில் சாலையில் பிளவு ஏற்பட்டு பெயர்ந்து விட்டன.
தமிழகப் பகுதியில் இருந்து கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு செல்வதற்கு முக்கியமான வழித்தடம் இது ஆகும். தற்போது இரு மாநிலத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும் காய்கறி, பால் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்கள் சரக்குவாகனங்கள் மூலம் இந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருக்கின்றன.
எனவே நெடுஞ்சாலை, வனத்துறை மற்றும் காவல்துறையினர் இப்பகுதியில் முகாமிட்டு ராட்சத பாறையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிறுபாறைகளும் ஆங்காங்கே உருண்டு விழுந்து சாலையோர இரும்பு தடுப்புகளை சேதப்படுத்தி உள்ளன.
மண் அள்ளும் இயந்திரம் மூலம் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாலைக்குள் இவை அகற்றப்பட்டு நாளை (செவ்வாய்) போக்குவரத்திற்கு தயாராகி விடும். இதற்கான அறிவிப்பு வரும் வரை வாகனங்கள் கம்பம்மெட்டு போன்ற மாற்றுப்பாதையில் செல்லுமாறு நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.