Published : 10 May 2021 14:30 pm

Updated : 10 May 2021 15:24 pm

 

Published : 10 May 2021 02:30 PM
Last Updated : 10 May 2021 03:24 PM

தமிழகத்தில் முன்களப் பணியாளர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் கரோனா தொற்று: விழிப்புடன் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

be-cautious-health-department-insists-frontline-workers

மதுரை

தமிழகத்தில் கரோனா 2-வது அலை சுகாதாரம், காவல்துறை, பத்திரிகை போன்ற முன்களப் பணியாளர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் சூழலில், அவர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளுமாறு, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டைவிட, கரோனா 2-வது அலையில் தாக்கம் அதிகரித்துள்ளது. பாதிப்பு, இறப்பு விகிதமும் தொடர்ந்து கூடிக்கொண்டே செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.


அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை அதிகரிக்கும் சூழலும் உருவாகியுள்ளது. சில தனியார் மருத்துவமனைகள் பிற பாதிப்பு நோயாளிகளை அனுமதிக்க மறுக்கின்றன.

இச்சூழலில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் சுகாதாரம், காவல்துறை, மாநகராட்சி, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறையினர் மற்றும் ஊடகத்துறையினர் போன்ற முன்களப்பணியாளர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுகின்றனர்.

இவர்கள் என்னதான் முன்னெச்சரிக்கை பாதுகாப்புடன் பணி செய்தாலும், தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்கும் சம்பவம் தொடர்கிறது.

மதுரையில் அண்மையில், 35 ஆண்டுக்கு மேலாக அச்சு ஊடகத்தில் பணிபுரிந்த மூத்த புகைப்பட கலைஞரான நம்பிராஜன் (63), பிரபல ஆங்கில நாளிதழிலில் பணியாற்றிய சரவணன் (55), கன்னியாகுமரி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகி டெனிசன் போன்றோர் அடுத்தடுத்த கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்.

இதே போல், மதுரை அனுப்பானடி பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா (32) கரோனா தொற்றுக்குளாகி மரணமடைந்தார்.

கர்ப்பிணியாக இருந்த போதிலும், அவரை வேலைக்குப் போவதைத் தவிர்க்க, குடும்பத்தினர் வலியுறுத்தியும், அர்ப்பணிப்பு உணர்வுடன் அவசர காலத்தில் பொதுமக்களுக்கு சேவையாற்றும் உயரிய நோக்கில் செயல்பட்டவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இரு பெண் குழந்தைகள், கணவரை மதுரையில் விட்டுவிட்டு, தேர்தல் பணிக்காக விருதுநகரில் தங்கி பணிபுரிந்த மதுரை 6வது தமிழ்நாடு சிறப்பு காவல் படை எஸ்ஐ லட்சுமி (45) என்பவரும் கரோனாவுக்கு பலியானார்.

கடந்த வாரம் மதுரை நகரில் போக்குவரத்து பிரிவு முதன்மைக் காவலர் பரமசாமி (45) கரோனாவால் உயிரிழந்தார். கடந்த முறை தொற்று தாக்கி உயிர் பிழைந்த இவர், 2வது அலையில் சிக்கி மரணமடைந்தார் என்பது பரிதாபம்.

மேலும், வேலூர் மாவட்டம், சத்துவாசாரியைச் சேர்ந்த செவலியர் பிரேமா (52), சென்னை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியில் இருந்த கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த செவிலியர் இந்திரா(41) ஆகியோரும் கரோனாவால் மரணமடைந்தனர்.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி டீன் உட்பட அங்கு பணிபுரிந்த மேலும், 9 பேர் தொற்று பாதித்து சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறாக தமிழகம் முழுவதும் செவிலியர், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் என, முன்களப் பணியாளர்கள் அடுத்தடுத்து கரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்கும் சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களுக்கான உயிர்ப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத சூழல் இருக்கிறதோ என்ற கேள்வியும் எழுகிறது.

இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, ‘‘கரோனா பாதிப்பு வேகமெடுக்கிறது. அதற்கான தடுப்பு நடவடிக்கை அரசு மேற்கொள்கிறது என்றாலும், ஏற்கெனவே இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் பொதுமக்கள் தமக்குத் தாமே பாதுகாப்பு விதிகளை பின்பற்றி விழிப்புடன் இருக்கவேண்டும்,’’ என்றனர்,

தவறவிடாதீர்!தமிழக கரோனா நிலவரம்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்முன்களப் பணியாளர்கள்சுகாதார துறை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x