

திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை விஷமிகளால் சேதப்படுத்தப்படவில்லை. எதேச்சையாகவே நேரிட்டது என்று, மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை சேதமடைந்திருப்பது நேற்று (மே 09) காலை தெரியவந்தது. தகவலறிந்து முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உள்ளிட்ட அதிமுகவினர், அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிலையைச் சேதப்படுத்தியவர்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, காந்தி மார்க்கெட் போலீஸில் வெல்லமண்டி என்.நடராஜன் புகார் அளித்தார்.
மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி இன்று (மே 10) செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில், "தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபோது, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் உருவச் சிலைகளும் துணியால் சுற்றப்பட்டு மூடப்பட்டன. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, சிலைகளில் சுற்றப்பட்டிருந்த துணிகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இதன்படி, மரக்கடை பகுதியில் உள்ள 26 ஆண்டுகள் பழமையான சிமென்ட்டால் ஆன எம்ஜிஆர் சிலையில் சுற்றப்பட்டிருந்த துணியை அகற்றியபோது, அந்தச் சிலையில் வலது கை மணிக்கட்டு பகுதியில் எதேச்சையாக உடைப்பு நேரிட்டது சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கண்டறியப்பட்டது. அந்தச் சிலை விஷமிகளால் சேதப்படுத்தப்படவில்லை.
அரசு, தனது வேலையைச் செய்யும்போது சிலை சேதமடைந்ததால், முதல்வரின் உத்தரவின்படி, சேதமடைந்த பகுதி உடனடியாகப் பொதுப்பணித் துறை மூலம் சீரமைக்கப்படவுள்ளது.
தவிர, திருச்சி மாநகராட்சி உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு இரும்புக் கூண்டுகள் விரைவில் அமைக்கப்படவுள்ளன. இனி புதிதாக மாவட்டத்தில் சிலை அமைக்க வேண்டுமெனில், தொடர்புடைய உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும்" என்றார்.