Last Updated : 10 May, 2021 11:28 AM

 

Published : 10 May 2021 11:28 AM
Last Updated : 10 May 2021 11:28 AM

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கரோனா; சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த 5-ம் தேதி சேலம், சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி ஆலயத்துக்குச் சென்று வழிபட்டார்.

பின்னர் புதுச்சேரி திரும்பிய அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால் என்.ஆர்.காங்கிரஸார் சார்பில் இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிமையான விழாவில் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

முன்னதாக விழாவில் பங்கேற்பவர்கள் கரோனா தொற்று இல்லை என்ற சான்றுடன் வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ரங்கசாமியுடன் நெருக்கமாக இருந்த என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் 2 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட பிறகு அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 8-ம் தேதி கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதற்கான முடிவு நேற்று இரவு (மே.9)வெளியானது. அதில் முதல்வர் ரங்கசாமிக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அச்சப்படத் தேவையில்லை

இதுகுறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜெயபால் கூறும்போது, ’’முதல்வருக்குப் பெரிய பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒரு வாரம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும். யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. முதல்வர் ரங்கசாமி விரைவில் குணமடைந்து வீடு திரும்பி மக்கள் பணியாற்றுவார்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x