Published : 10 May 2021 11:22 AM
Last Updated : 10 May 2021 11:22 AM

சென்னையில் அத்தியாவசியப் பணிகளுக்காக 200 மாநகர பேருந்துகள் இயக்கம்

சென்னை

சென்னையில் முழு ஊரடங்கு அமலானதை அடுத்து அத்தியாவசியப் பணிகள், அவசரப்பணிகளுக்காக முக்கிய வழித்தடங்களில் 200 அரசுப்பேருந்துகளை இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்றுப்பரவல் அதிகரித்ததை அடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தை அடுத்து மே.10 முதல் மே.24 வரை 2 வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இன்றுமுதல் முழு ஊரடங்கு அமலானது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் கடும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவை தவிர மற்ற தேவைகளுக்கு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முக்கிய பணிகளுக்காக 200 அரசுப் பேருந்துகளை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:

“தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதல்வர் உத்தரவின் பேரில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அத்தியாவசியமான மற்றும் அவசியமான செயல்பாட்டுகளுக்காக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்களின் நலன் கருதி இரண்டு வார காலத்திற்குள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த அளவில் பணியாற்றுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அந்த வகையில் அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பணி புரிகின்ற வகையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக 200 பேருந்துகள் இன்று முதல் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. பின்னர் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் சென்னை பெருநகர மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் ஆகியோர் அரசு விதித்துள்ள நோய்த்தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறும், முக கவசம் அணிந்து பயணிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x