Last Updated : 10 May, 2021 06:24 AM

 

Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM

கரோனாவால் நிறுத்தப்பட்ட டிஜிட்டல் நூலகப் பணிகள்: உடுமலையில் வாசகர்கள் ஏமாற்றம்

திருப்பூர் மாவட்டம், உடுமலை-தளி சாலையில் கடந்த 1954-ம் ஆண்டு அரசு கிளை நூலகம் எண் 1 தொடங்கப்பட்டது. இந்நூலகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் பல்வேறு செயல்பாடுகளால் மாவட்டத்திலேயே சிறந்த நூலகமாக தேர்வு செய்யப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உடுமலை கிளை நூலகத்தை மாதிரி நூலகமாக மாற்ற வேண்டி, ரூ.50 லட்சம் நிதியை அரசு ஒதுக்கியது.

இத்திட்டத்தின்படி யுபிஎஸ்சி தேர்வுக்கான நூல்கள், குளிரூட்டப்பட்ட இணையதளப் பிரிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரைலி நூல்கள், குழந்தைகள்(விளையாட்டு உபகரணங்களுடன்), பெண்களுக்கென தனித்தனி பிரிவுகள், நகல் எடுக்கும்வசதி, பார்கோடு அடங்கிய நூல்கள் என பல்வேறு அடிப்படை வசதிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டது. உடுமலையில் ஆமை வேகத்தில் தொடங்கிய இத்திட்டப்பணிகள், 2020-ல்கரோனா பரவல் காரணமாக பாதியில் கைவிடப்பட்டன. இதுவரை பணிகள் நடைபெறவில்லை.

இதுகுறித்து வாசகர் வட்டத் தலைவர் லெனின்பாரதி கூறும்போது, ‘‘கணினி மென்பொருள், இணையதள வசதி ஆகியவற்றை எல்காட் நிறுவனமும், மேஜைகள், நாற்காலிகள், தடுப்புகள் உள்ளிட்ட பணிகளை டான்சி நிறுவனமும் செய்ய அரசால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதுவரை பணிகள் முழுமை பெறாததால், நூலகம் திறக்கப்படவில்லை. தற்போது பொறுப்பேற்கவுள்ள திமுக அரசு கூடுதலான நிதி ஒதுக்கி, பணிகளை விரைந்து முடித்து, டிஜிட்டல் நூலகத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மாவட்ட நூலக அலுவலர் மணிகண்டன் கூறும்போது, ‘‘டிஜிட்டல் நூலகப் பணிக்குத் தேவையான கூடுதல் நிதி கேட்டுமுந்தைய அதிமுக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது திமுக அரசு பொறுப்பேற்றுள்ளதால், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x