

கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு இன்று முதல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் இருந்து பலர் நேற்று காலை முதல் பகல் முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் தமிழக எல்லையான ஓசூருக்கு கால்நடையாக வந்தனர்.
கர்நாடகா மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அம்மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு இன்று (10-ம் தேதி) முதல் வரும் 24-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்திலும் இன்று முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இரு மாநிலத்தைச் சேர்ந்த மக்களும் நேற்று தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணமாயினர். கர்நாடக மாநிலத்தில் ஏற்கெனவே முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், அங்கு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை முதல் கர்நாடக மாநிலத்தில் இருந்து பெங்களூரு அத்திப்பள்ளி வழியாக தமிழக எல்லை ஜுஜுவாடிக்கு நூற்றுக்கணக்கான மக்கள் சுட்டெரிக்கும் கோடை வெயிலை பொருட்படுத்தாமல் குடும்பம் குடும்பமாக கால்நடையாக வந்தவண்ணம் இருந்தனர்.
ஜுஜுவாடியில் இருந்து தமிழக பேருந்துகள் இயக்கப்பட்டதால், அங்கிருந்து ஓசூர் பேருந்து நிலையத்துக்கு வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கு மக்கள் பயணம் செய்தனர்.
இதேபோல இன்று முதல் தமிழகத்தில் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமலுக்கு வருவ தால், தமிழகத்தில் பணிபுரியும் கர்நாடகாவைச் சேர்ந்த பலர் ஓசூரிலிருந்து பெங்களூருக்கு ஜுஜுவாடி வரை இயக்கப்பட்ட தமிழக அரசுப் பேருந்துகளில் பயணித்து அங்கிருந்து கால்நடையாக நடந்து சென்று அத்திப்பள்ளி வழியாக பெங்களூரு நகரப்பகுதிக்கு சென்றனர்.
நேற்று கோடை வெயில் வாட்டி எடுத்த நிலையிலும் இரு மாநில மக்களும் தங்கள் சொந்த ஊருக்கு கால்நடையாகவும், இருசக்கர வாகனங்களிலும் புறப்பட்டு சென்றதால், இருமாநில எல்லையிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து இருப்பதை பார்க்க முடிந்தது.
தமிழக எல்லையான ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வரும் வாகனங்களில் வருவோர் இ-பாஸ் இருந்தால் மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணியில் சுகாதாரத் துறையினர், காவல்துறையினர் ஒருங்கிணைப்புடன் ஈடுபட்டனர்.