

கரோனா சிறப்பு வார்டில் பணியாற்றிய பிறகு தனிமைப் படுத்திக்கொள்ளும் காலத்தில் சொந்த கிளினிக்குகளில் சிகிச்சை அளித்தால் சம்பந்தப்பட்ட மருத் துவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் கிளினிக்கை மூடி ‘சீல்' வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வேலூர் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல் வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒரு சில அரசு மருத்துவர்கள் கரோனா வார்டில் பணியை முடித்த பிறகு தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதற்காக ஒரு வாரம் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட மருத்துவர்களுக்கு தனிமைப் படுத்திக்கொள்ளும் காலத்தை குறைக்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும், தனிமைப்படுத்திக்கொள்ளும் காலத்தில் மருத்துவர்கள் தங்களது வீடுகளில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். சொந்தமாக நடத்தி வரும் கிளினிக்குகளில் மருத்துவம் பார்க்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கரோனா சிறப்பு வார்டில் பணியாற்றிய பிறகு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் காலத்தில் சில மருத்துவர்கள் தங்களது சொந்த கிளினிக்கு களுக்கு சென்று அங்கு மருத்தும் பார்த்து வருவதாக புகார் எழுந் துள்ளது. இதன் மூலம் பலருக்கு கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படும். ஆகவே, தனிமைப் படுத்திக்கொள்ளும் காலத்தில் தங்களது சொந்த கிளினிக்குகளில் சிகிச்சை அளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கிளினிக்குகளுக்கு ‘சீல்' வைக்க வருவாய் கோட்டாட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, கரோனா வார்டில் பணியாற்றி வந்த மருத்துவர்கள் ஒரு வாரகாலத்துக்கு தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதேபோல, அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் தனிமைப் படுத்திக்கொள்ளும் காலத்தில் கிளினிக்குகளில் சிகிச்சை அளிப்பது தெரியவந்தால் பொதுமக்கள் 94980-35000 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுத்து அனுப்பி வைக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.