

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 20 முஸ்லிம்களுக்கு புத்தாடை, பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆண்டுதோறும் கொளத்தூர் தொகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புத்தாடையையும், ரம்ஜான் அன்று அவர்கள் அறுசுவை உணவு உண்ணத் தேவையான பொருட்களையும் வழங்குவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமாக வைத்திருக்கிறார்.
அதன்படி, இந்தாண்டு முதல்வரும், கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான மு.க.ஸ்டாலின், இன்று (நேற்று) தனது இல்லத்தில் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 20 முஸ்லிம்களுக்கு புத்தாடைகளையும் பரிசுப் பொருட்களையும் வழங்கி, முஸ்லிம்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து மீதமுள்ள 2 ஆயிரத்து 200 பேருக்கு கொளத்தூர் தொகுதி திமுக நிர்வாகிகள், அவர்கள் இல்லங்களுக்குச் சென்று புத்தாடையும், பரிசுப் பொருட்களும் வழங்கவுள்ளனர். முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடனிருந்தார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.