

தமிழகத்தில் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால் 7.55 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து, அனுப்பி வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசிக
ளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தும்கூட, தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனே சீரம் நிறுவனத்தில் இருந்து 5.89 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தில் இருந்து 1.66 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து, தமிழகத்துக்கு நேற்று அனுப்பியது.
சென்னை விமானநிலையத்தில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், குளிர்சாதன வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்புக் கிடங்குக்கு கொண்டுசென்று, உரிய பாதுகாப்புடன் வைத்தனர். இதையடுத்து, தடுப்பூசிகளை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு இதுவரை 82.31 லட்சம் தடுப்பூசிகளை தமிழகத்துக்கு அனுப்பியுள்ளது. இதில்64 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 8 லட்சம் தடுப்பூசிகள் வீணாகியதுபோக, இரண்டு வாரங்களுக்குத் தேவையான 10 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.