Published : 10 May 2021 05:36 AM
Last Updated : 10 May 2021 05:36 AM

வாகனத்தை பதிவு செய்யும்போது மாற்று உரிமையாளர் பெயரைக் குறிப்பிட வாகன விதிகளில் புதிய திருத்தம் அமல்

சென்னை

வாகனத்தை பதிவு செய்யும்போது மாற்று உரிமையாளரின் பெயரைக்குறிப்பிடும் வகையில், மோட்டார் வாகன விதிகளில் புதிய திருத் தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு வாகனத்தைப் பதிவு செய்யும்போது, அதன் உரிமையாளரின் பெயரைக் குறிப்பிட வேண்டியது அவசியம். அந்த வாகனத்தின் உரிமையாளர் இறந்துவிட்டால், வாகனத்துக்கு உரிமை கோருவதில் சிக்கல் ஏற்படும் சூழல் இருக்கிறது. இதனால், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரின் குடும்பத்தினரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதற்குத் தீர்வுகாணும் வகையில், வாகனத்தைப் பதிவு செய்யும்போதே அதன் உரிமையாளர் பெயருடன், மாற்று உரிமையாளரின் பெயரையும் குறிப்பிடுவதற்கு மோட்டார் வாகன விதிகளில், மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: வாகனத்தைப் பதிவு செய்யும்போது, மாற்று உரிமையாளரின் பெயரையும் சேர்த்து குறிப்பிடலாம். இல்லையெனில், வாகனத்தை பதிவு செய்த பிறகு, இணையவழியில் மாற்று உரிமையாளரின் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு குறிப்பிடும்போது, மாற்று உரிமையாளரின் அடையாள அட்டையைத் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாகும். வாகனத்தின் உரிமையாளர் இறந்துவிட்டால், அந்த வாகனத்தைப் பதிவு செய்யும்போது, குறிப்பிடப்பட்ட மாற்று உரிமையாளருக்கு அந்த வாகனம் சொந்தமாகும்.

30 நாட்களுக்குள்..

வாகன உரிமையாளர் இறந்துவிட்டால், அடுத்த 30 நாட்களுக்குள் அது தொடர்பான தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு, மாற்று உரிமையாளர் தெரியப்படுத்த வேண்டும். அதன்பிறகே அந்தவாகனத்தை, மாற்று உரிமையாளர் பயன்படுத்த முடியும். மாற்று உரிமையாளரை மாற்றிக்கொள்வதற்கும் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வாகன உரிமையாளர் இறந்துவிட்டால், அடுத்த 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். பின்னர், வாகன உரிமையாளரின் இறப்புச் சான்று உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். இது போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து வாகனங்களுக்கும் பொருந்தும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய திருத்தப்படி, வாகன உரிமையாளர் இறந்த பின்னர், அவர் குறிப்பிட்டுள்ள மாற்று உரிமையாளர் வாகனத்தைப் பயன்படுத்தலாம். எனினும், வாகன உரிமையாளரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் மாற்று உரிமையாளரின் ஆவணங்களை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x