

முறைகேடுகள் புகார்கள் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுரப்பா அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று விசாரணை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே.சுரப்பா 2018 முதல் 2021 ஏப்ரல் 12-ம் தேதி வரை பொறுப்பு வகித்தார். இவரது பணிக் காலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் உள்ளிட்டவற்றில் ரூ.280 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் 7 பேர் கொண்ட ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. பல்கலை. உயரதிகாரிகள், புகார் அளித்தவர்கள், சாட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நோட்டீஸ்
புகார்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு சுரப்பாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசிடம் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கையை தயாரிக்கும் பணிகளையும் ஆணையம் முடுக்கிவிட் டுள்ளது.
இதுகுறித்து விசாரணைக் குழு அதிகாரிகள் சிலர் கூறியதாவது: சுரப்பா மீதான விசாரணை பணி 90 சதவீதம் முடிந்துவிட்டது. முறைகேடுகள் தொடர்பாக விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் அதற்கான விளக்கத்தை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசிடம் அறிக்கை தாக்கல்
தற்போது சுரப்பாவின் பதில் மனுவை எதிர்பார்த்துள்ளோம். அதன் அடிப்படையில் அறிக்கையை இறுதிசெய்து தமிழக அரசிடம் தாக்கல் செய்வோம். அவரது விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால், அவர் மீதுநடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப் படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.