

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு செயற்கை ஆக்சிஜன் கருவி யின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலின் 2-வது அலை மிக மோசமாக உள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசியதாவது:
கரோனாவால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை அதி கரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் பல ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டும், இறக்குமதி செய்யப்பட்டும் வருகிறது. இவை கால தாமதம் இன்றி அனைத்து மாநிலங்களுக்கும் விநி யோகிக்கப்படுவதால், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த விஷயத்தில் அனைத்து அமைச்சகங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4.88 லட்சம் பேர் (அதாவது 1.34% பேர்) ஐசியு வசதி கொண்ட படுக்கைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வென்டிலேட்டர் உதவியுடன் 1.70 லட்சம் பேரும் (0.39%), செயற்கை ஆக்சிஜன் கருவிகளின் உதவியுடன் 9.02 லட்சம் பேரும் (3.70%) சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.