Published : 10 May 2021 04:29 AM
Last Updated : 10 May 2021 04:29 AM

தமிழகம் முழுவதும் பேருந்து, டாக்ஸி, ஆட்டோக்கள் ஓடாது; இன்று முதல் முழு ஊரடங்கு அமல்: காய்கறி, மளிகை கடைகளுக்கு பகல் 12 மணி வரை அனுமதி

தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றனர். இதனால் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட இரு வார முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த நாட்களில் பேருந்து, டாக்ஸி, ஆட்டோக்கள் இயங்காது. மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் பகல் 12 மணி வரை திறந்திருக்கும் தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று 28 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுதொடர்பாக
ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், மே 10 முதல் 24-ம் தேதி வரைதமிழகம் முழுவதும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

அதன்படி இன்று அதிகாலை 4 மணி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. ஊரடங்கு காலத்தில் தனியாக செயல்படும் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை இயங்கலாம். இவை தவிர டாஸ்மாக் மதுபானக் கடைகள், அழகு நிலையங்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும். மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, காய்கறி, மீன் இறைச்சி ஆகியவை 12 மணிவரை விநியோகிக்கலாம்.

உணவகங்களில் பார்சல் சேவைக்கும், உணவு விநியோக நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரம் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள்,பூச்சிக்கொல்லி, உரம், விதை, மாட்டுத்தீவனம் விற்பனை செய்யும் கடைகள் பகல் 12 மணிவரை செயல்படலாம். தலைமைச்செயலகம், மருத்துவம், வருவாய், காவல் உள்ளிட்ட முக்கிய துறைகள் தவிர மற்ற அரசுத் துறைகள் இயங்காது.

தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள், ஐடி நிறுவனங்களும் விலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகளும் இயங்காது.

மாவட்டங்களுக்குள், மாவட்டங்களுக்கு இடையே தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்து, வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலை வாய்ப்பு, மருத்துவமனைக்கு செல்ல உரிய ஆவணங்களுடன் பயணிக்கலாம்.

பால், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவுத் தபால் சேவை, மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், அனைத்து சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, விவசாயிகளின் விளை பொருட்கள், ஆக்சிஜன், எரி பொருள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதி உண்டு.

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். ரேஷன் கடைகள் காலை 8 முதல் 12 மணி வரை செயல்படும்.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சொந்த ஊர் பயணம்

முழு ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து வெளியூர்களில் தங்கியுள்ளவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர். சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு வசதியாக கடந்த 2 நாட்களாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னையில் இருந்து ஏராளமானோர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதுதவிர கால்டாக்ஸி, கார், சரக்கு வாகனம் போன்ற சொந்த வாகனங்களிலும் பலர் சென்றனர்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘பயணிகளின் வருகைக்கு ஏற்ப தமிழகம் முழுவ
தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக, சென்னையில் இருந்து 9,600 பேருந்துகளை இயக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், பயணிகளின் வருகை சற்று குறைவாக இருந்தது. இருப்பினும், 5,500-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளை இயக்கினோம். கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 2.50 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்’’ என்றனர்.

வாகனங்கள் பறிமுதல் கூடாது: டிஜிபி உத்தரவு

ஊரடங்கின்போது சாலைகளில் தேவையில்லாமல் இரு சக்கர வாகனங்களில் சுற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘மளிகை, காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகளிலேயே பொதுமக்கள் வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு பகுதியை விட்டு வேறு பகுதிக்கு இரு சக்கர வாகனங்களில் சென்றால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி ஜே.கே.திரிபாதி நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில், ‘ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சாலைகளில் செல்லும் வாகனங்களை புகைப்படும் எடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். அபராதமும் விதிக்கலாம். ஆனால், வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டாம். அப்படி பறிமுதல் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் வாகனத்தை விடுவித்துவிடவேண்டும். பொதுமக்களிடம் காவல் துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்து கொள்ளக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x