'ஹலோ தாத்தா, சைக்கிள் வாங்கிக் கொடுத்ததற்கு நன்றி..' சேமிப்புப் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய மதுரை சிறுவன் நெகிழ்ச்சி

'ஹலோ தாத்தா, சைக்கிள் வாங்கிக் கொடுத்ததற்கு நன்றி..' சேமிப்புப் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய மதுரை சிறுவன் நெகிழ்ச்சி
Updated on
2 min read

மதுரையில் சைக்கிள் வாங்குவதற்காக சேமித்த பணத்தை கரோனா ஒழிப்புக்காக அனுப்பிய மதுரையைச் சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்து நெகிழச் செய்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் அமரேஸ் இளங்கோவன். இவரது மனைவி தீபா. இவர்களின் ஒரே மகன் ஹரிஸ்வர்மன் (7). மதுரை புனித பிரிட்டோ மெட்ரிக் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

ஹரிஸ்வர்மனுக்கு 3-ஆண்டுக்கு முன்பு அவனது பிறந்தநாளை ஒட்டி உண்டியல் ஒன்றை இளங்கோ பரிசாக வழங்கியுள்ளார். அந்த உண்டியலில் அவ்வப்போது அப்பா, அம்மா , வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் வழங்கும் பணத்தை சைக்கிள் வாங்குவதற்காக ஹரிஸ்வர்மன் சேமித்து வந்தார்.

கரோனா 2-ம் அலை வேகமாகப் பரவி வரும் சூழலில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையடுத்து ஹரிஸ்வர்மன் தனது உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை கரோனா நிவாரணப் பணிக்காக தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்.

உண்டியலைத் திறந்து அதிலுள்ள பணத்தை எண்ணியபோது உண்டியலில் ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. மொத்தப் பணத்தையும் முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்ப முடிவு செய்து, தனது விருப்பத்தை தந்தை இளங்கோவிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு சம்மதம் தெரிவித்த இளங்கோ, ஆயிரம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வங்கி வரைவோலை மூலம் அனுப்பி வைத்தார்.

அந்த வங்கி வரைவோலையுடன் தமிழக முதல்வருக்கு ஹரிஸ்வர்மன் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

அதில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வணக்கத்துடன் எனது வாழ்த்துக்கள். கரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற நான் சேர்த்து வைத்த பணத்திலிருந்து ஆயிரம் ரூபாயை உங்களுக்குத் தருகிறேன். நன்றி’ என ஹரிஸ்வர்மன் எழுதியுள்ளார்.

இந்நிலையில் மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கோ.தளபதி இன்று ஹரிஸ்வர்மன் வீட்டிற்கு நேரில் சென்று பாராட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் சைக்கிள் ஒன்றை பரிசாக வழங்கினார்.

பின்னர், அங்கிருந்தபடி தளபதி செல்போனில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு ஹரிஸ்வர்மனை பேச வைத்தார். மு.க.ஸ்டாலின், ‘சிறுவனிடம் நல்லாயிருக்கியா? உன் பெயர் என்ன? என்ன படிக்கிறாய்? அப்பா பெயர் என்ன? சைக்கிளை எடுத்துட்டு இப்போது வெளியே போகாத, கரோனா இருக்கு, கரோனா முடிந்ததும் ஓட்டு, நல்லாபடி’ என்றார்.

அதற்கு, ‘ஹலோ தாத்தா, வாழ்த்துக்கள் தாத்தா, 2-ம் வகுப்பு படிக்கிறேன், சைக்கிள் வாங்கி கொடுத்ததுக்கு நன்றி’ என்றான் ஹரிஸ்வர்மன். வாழ்த்துக்கள் சொன்ன சிறுவனுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in