தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம்
தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக முதல்வராக மே 7 அன்று மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், உடனடியாக தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார்.
சென்னை மாநகரக் காவல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டனர். முதல்வருக்கு 4 தனிச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர். சென்னை மாநகராட்சி ஆணையரும் மாற்றப்பட்டார்.
இதனிடையே, அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த விஜய் நாராயணன், மே 2 அன்று தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே ராஜினாமா செய்தார். இந்நிலையில், தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தை நியமித்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
1977-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த சண்முகசுந்தரம், தன் தந்தையும் புகழ்பெற்ற வழக்கறிஞருமான எஸ்.ராஜகோபாலிடம் கிரிமினல் சட்டத்தில் பயிற்சி பெற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக, மாநில அரசு, சிபிஐ, ரயில்வே சார்பாக பல வழக்குகளில் வாதாடியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை குறித்து விசாரித்த எம்.சி.ஜெயின் விசாரணை ஆணையம் உட்பட பல விசாரணைகளுக்கு சண்முகசுந்தரம் அரசு சார்பாக வாதாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
