Last Updated : 09 May, 2021 07:34 PM

 

Published : 09 May 2021 07:34 PM
Last Updated : 09 May 2021 07:34 PM

திருப்பத்தூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க புதிய அரசு முயற்சியை எடுக்கும்: ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏக்கள் உறுதி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிவன் அருளை திமுக எம்எல்ஏக்கள் நல்லதம்பி, தேவராஜ்,வில்வநாதன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளை நேரில் சந்தித்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருப்பத்தூரில் மருத்துவக்கல்லூரி அமைக்க புதிய அரசு முழு முயற்சியை எடுக்கும் என உறுதியளித்தனர்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை மற்றும் ஆம்பூர் ஆகிய 3 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளை திருப்பத்தூர் மாவட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), தேவராஜ் (ஜோலார்பேட்டை), வில்வநாதன் (ஆம்பூர்) ஆகியோர் இன்று நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது, ‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோய் பரவல் குறித்தும், அதை தடுப்பதற்கான வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் எவ்வாறு மேற்கொண்டு வருகிறது என கேட்டறிந்தனர். அதன்பிறகு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகளை அதிகரிக்கவும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருவோர்களுக்கு தடையில்லா ஆக்சிஜன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி கோரிக்கை விடுத்தார்.

அப்போது, திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 100 படுக்கை வசதியை ஏற்படுத்தி தருவதாக அவர் உறுதியளித்தார். அதேபோல், ஜோலார்பேட்டை, ஆம்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களும் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்யத் தயாராக இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் உறுதியளித்தனர்.

இதைத்தொடர்ந்து, புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் விரைவாக கொண்டு வர வேண்டும். ஆலங்காயம் பகுதியை தாலுகா அந்தஸத்தில் உயர்த்த வேண்டும்.

அதேபோல, ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதூர்நாடு பகுதியில் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் வசிப்பதால் அங்கு தனி ஒன்றியம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற எண்ணற்ற வசதிகள் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் பெற சட்டப்பேரவையில் குரல் கொடுப்பதாக 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் உறுதியளித்தனர். மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைய புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு அதற்கான முயற்சியை எடுக்கும் எனக்கூறினர்.

இந்நிலையில், ஜோலார்பேட்டை தொகுதி மறுவரையறை செய்யப்படுவதற்கு முன்பு நாட்றாம்பள்ளி தொகுதியாக இருந்தது. அப்போது நாட்றாம்பள்ளி பேருந்து நிலையம் அருகே சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அரசு சார்பில் கட்டப்பட்டிருந்தது. தற்போது ஜோலார்பேட்டை தொகுதியாக மாற்றம் செய்யப்பட்ட பிறகு, அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் ஜோலார்பேட்டை பிரதான சாலையில் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என ஜோலார்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம் கோரிக்கை விடுத்தார். இதையேற்ற ஆட்சியர், தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி அரசு உத்தரவு மற்றும் நிதி ஒதுக்கீடு செய்த பிறகு அதற்கான முயற்சிகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x