

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதலாக ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்க வேண்டும் என, மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இன்று கோரிக்கை மனு அளித்துள்ளார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சுமார் 450 படுக்கைகள் உள்ளன. இதில், 320 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு, சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகின்றன. ஆனால், ஆக்சிஜன், உயிர்காக்கும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கூடுதலாக ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்குமாறு, மாநில மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு, மாநில சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று (மே 09) கோரிக்கை மனு அளித்தார்.
இது குறித்து, அமைச்சர் மெய்யநாதன் அளித்துள்ள கோரிக்கை மனு விவரம்:
"புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இன்றைய தேவையாக சுமார் 3,720 லிட்டர் வீதம் ஆக்சிஜன் உள்ளது.
ஆனால், 2,500 லிட்டர்தான் இருப்பில் உள்ளது. எனவே, தினமும் 6,000 லிட்டர் கூடுதலாக வழங்க வேண்டும்.
198 ரெம்டெசிவிர் மருந்துகள்தான் உள்ளன. கூடுலாக 2,000 மருந்துகளை அனுப்ப வேண்டும். மேலும், மருத்துவமனையில் கூடுதலாக 300 ஆக்சிஜன் கண்காணிப்பு மீட்டர் தேவைப்படுகிறது".
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்தில் தீர்வு:
இந்த கோரிக்கை மனு அளித்த ஒரு மணி நேரத்துக்குள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 6,000 லிட்டர் ஆக்சிஜன் கொண்டு வந்து நிரப்பப்பட்டது.