

முதல்வரின் தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உமாநாத் ஐஏஎஸ் பெயரை தங்களது பகுதிக்கு சூட்டி, அவர் செய்த உதவியை இன்றளவும் நினைவுகூர்ந்து வருகின்றனர், கோவை கிராம மக்கள்.
பொதுமக்கள் கோரிக்கை மனுக்களோடு அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து திரிந்தாலும், அதில் அனைத்து கோரிக்கைகளுக்கும் உரிய தீர்வு கிடைப்பதில்லை. தீர்வு கிடைக்க வழிவகை செய்த அதிகாரிகளையும் காலப்போக்கில் மக்கள் மறந்துவிடுகின்றனர்.
ஆனால், கோவையில் தங்களுக்கு உதவி செய்த ஆட்சியரை நினைவுகூறும் வகையில், அவரது பெயரை தங்களது பகுதிக்கு சூட்டி, கிராம மக்கள் நன்றிக்கடன் செலுத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்டது எலச்சிபாளையம், விராலிக்காடு பகுதி. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்புவரை இப்பகுதி மக்களுக்கு பட்டா கிடைக்கவில்லை.
30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்கள் பட்டா கேட்டு அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோரிக்கை மனு, போராட்டம் என பலகட்ட முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 2011-ம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த உமாநாத்திடம், விராலிக்காடு பகுதி மக்கள் பட்டா வழங்கக் கோரி கோரிக்கை மனு அளித்தார். இதனை பரிசீலித்த உமாநாத், அங்கு குடியிருந்து வரும் 80 குடும்பங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டார். இதனால் அப்பகுதி மக்களின் 30 ஆண்டு கால கனவு நிறைவேறியது.
அரசு அதிகாரியாக தனது பணியை ஆட்சியர் உமாநாத் செய்திருந்தாலும், அப்பகுதிக்கு 'கலெக்டர் உமாநாத் காலனி' என மக்கள் பெயர் சூட்டினர். மேலும், அனைத்து அரசு ஆவணங்களிலும் 'உமாநாத் காலனி' என்றே மாற்றியுள்ளனர்.
2011-க்குப் பிறகு பணி மாறுதல் காரணமாக உமாநாத் பல்வேறு பொறுப்புகளுக்கு சென்ற நிலையிலும், கடந்த பத்து ஆண்டுகளாக அப்பகுதி 'கலெக்டர் உமாநாத் காலனி' என்ற பெயரை தாங்கி வருகிறது. தங்களது ஊருக்கு உதவி செய்த உமாநாத், தற்போது முதல்வரின் தனிச்செயலர் என்ற முக்கிய பொறுப்புக்கு வந்திருப்பது 'கலெக்டர் உமாநாத் காலனி' மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் கூறும்போது, "30 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் சிரமப்பட்டு வந்தோம். எங்களது கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கிய ஆட்சியருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இப்பகுதிக்கு 'கலெக்டர் உமாநாத் காலனி' என பெயர் வைத்தோம்.
எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை முதல் குடும்ப அட்டை வரை அரசு ஆவணங்களிலும் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது" என்றனர்.