முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவையின் முதல் கூட்டம் தொடங்கியது: கரோனா பரவல் குறித்து ஆலோசனை
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் தொடங்கியது.
முதல்வராக மு.க.ஸ்டாலின் மே 07 அன்று பொறுப்பேற்றார். ஸ்டாலினுடன் சேர்த்து 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர்.
இந்நிலையில், முதல் அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று (மே 09) காலை சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 11.30 மணியளவில் தொடங்கியது.
இக்கூட்டத்தில், நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட 33 அமைச்சர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, முதல்வரின் தனிச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சவாலாக உள்ள கரோனா இரண்டாம் அலையை எவ்வாறு எதிர்கொள்வது, நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை எவ்வாறு செய்வது, கரோனா நிவாரண நிதி முதல்கட்டமாக ரூ.2,000 வழங்குவதற்கான நிதி ஒப்புதல், நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்கிற திட்டத்துக்கான நிதி ஒப்புதல், மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக்கூட்டத்தில், எடுக்கபட்ட முடிவுகள் குறித்து கூட்டம் முடிந்த பின் செய்திக்குறிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
