

நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மே 9-ம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பலரும் தங்கள் தாய்க்கு பரிசுப்பொருட்கள் வழங்கியும், வாழ்த்து தெரிவித்தும் கொண்டாடுவர்.
அந்தவகையில் இன்று (மே 09) அன்னையர் தினத்தை முன்னிட்டு, பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று கோபாலபுரம் இல்லத்தில் உள்ள தன் தாய் தயாளு அம்மாளை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்று, பூங்கொத்து கொடுத்தார். அப்போது, அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் உடனிருந்தார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து, மு.க.ஸ்டாலின் இன்று (மே 09) தன் ட்விட்டர் பக்கத்தில், "தாய்மொழி, 'தாய்'நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய்.
பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு! எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் #MothersDay நல்வாழ்த்துகள்! மகளிர் நலத்துடன், அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்!" என பதிவிட்டுள்ளார்.