

கரோனா நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற, சித்தா, ஹோமியோ, ஆயுர்வேத மருத்துவத்தை இணைத்து, புதிய மருத்துவ மையங்களை உருவாக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊரடங்கை தொடர்ந்து நீடிப்பதாலோ, ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கை வசதிகள் அதிகரிப்பு ஆகியவற்றாலோ கரோனா 2-வது அலையிலிருந்து மீண்டுவிட முடியாது. தொலைநோக்குப் பார்வையின்றி, போதிய கட்டமைப்புகளை உருவாக்காமல் போனதன் விளைவே இத்தகைய நிலைமைக்கு காரணம்.
பலர் சோதனை செய்துகொள்ளவே தயங்குகின்றனர். சோதனை செய்தாலும் 2 முதல்5 நாட்களுக்குப் பிறகே மருத்துவ அறிக்கை கிடைக்கிறது. அதற்குள் தொற்று தீவிரமாகி, நுரையீரலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
கோடிக்கணக்கில் கொள்ளை
தனியார் மருத்துவப் பரிசோதனைக் கூடங்களில் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பரிசோதனை என்ற பெயரில் கொள்ளையடிக்கப்படுகிறது.
தொடக்கத்திலேயே நோயைக்கண்டறிந்து மருத்துவம் மேற்கொண்டால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலை உருவாகாது. புதிய அரசு இதை உணர்ந்து, மிக விரைவாக நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
தயக்கம் ஏன்?
சீனாவில் பாரம்பரிய மருத்துவத்தை, ஆங்கில மருத்துவத்துடன் இணைத்து கரோனாவை ஒழித்தார்கள். இதைச் செய்த இந்திய அரசு தயங்குவது ஏன்?
சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேத மருத்துவத்தை இணைத்து, உடனடி மருத்துவ மையங்களை தமிழகத்தில் உருவாக்கலாம். பள்ளி, அரசுக் கட்டிடங்களை இதற்குப் பயன்படுத்தலாம். சித்தா, ஹோமியோபதி மருத்துவர்கள் சிலர், மருத்துவமனையில் தங்கவேண்டிய தேவை இல்லாமலேயே, நோயை முழுமையாக குணப்படுத்தி விடுகின்றனர்.
எனவே, பீதியில் உறைந்து கிடக்கும் மக்களுக்காக, அரசு இந்தக் கோரிக்கையை பரிசீலித்து, நோயிலிருந்தும், உயிர் இழப்பிலிருந்தும் மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு தங்கர்பச்சான் தெரி வித்துள்ளார்.