

கோவை மாவட்டத்தில் ஆளும் கட்சியான திமுக சார்பில் எம்எல்ஏக்கள் இல்லாததால், கட்சி நிர்வாகிக்கு, வாரியத் தலைவர் பதவியை வழங்கி, மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகளை முறையாக கண்காணிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி நடந்தது. இதன் முடிவில், மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், வால்பாறை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். தமிழகத்தில் ஆளும் கட்சியாக திமுக வந்தும், இங்கு அமைச்சராக நியமிக்கக்கூட ஒருவரும் வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான கோவையில், தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பலவித கட்டமைப்புகள் உள்ளன. இம்மாவட்டத்தின் கோரிக்கைகளை அரசிடம் எடுத்துச் செல்லவும், வளர்ச்சித் திட்டப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் ஆளும் கட்சியான திமுக சார்பில் பிரதிநிதிகள் யாரும் இல்லாதது, மாவட்டத்தில் உள்ள அக்கட்சியினர், பொதுமக்கள், நடுநிலையாளர்கள் மற்றும் தொழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரை வருத்தமடையச் செய்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட திமுக நிர்வாகிகள் தரப்பில் கூறும்போது, ‘‘கோவையில், திமுக சார்பில் யாரும் வெற்றி பெறாதது கட்சித் தலைமையிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், அரசின் வளர்ச்சித் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும் ஆளும் கட்சியான திமுக சார்பில் பங்கேற்க இங்கு ஒருவர் இருப்பது அவசியம். கட்சிப் பொறுப்பை வைத்துக் கொண்டு மட்டும் இதை செய்ய முடியாது. அரசு பதவி வேண்டும். அமைச்சராக நியமிக்க இங்கு யாரும் வெற்றி பெறாததால், மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய திமுக நிர்வாகி ஒருவருக்கு வாரியத் தலைவர் பதவி வழங்க தலைமை முடிவு செய்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது,’’ என்றனர்.