

கொமதேக பொதுச்செயலரும், திருச்செங்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக மக்கள் அதிக எதிர்பார்ப்புகளோடு, ஆட்சி மாற்றத்தை கொடுத்து சிறப்பான ஆட்சியை அமர்த்தியுள்ளனர். பதவியேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளைத் தேர்வு செய்ததில் இருந்தேஅவர் எப்படி செயல்படுவார் எனதெரிந்துவிட்டது. முதல் நாளிலேயே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் கையெழுத் திட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளார். விரைவில், கரோனா பிடியில் இருந்து முதல்வர் தமிழகத்தை மீட்பார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம். ஆந்திரா செல்லும் 60 டன் ஆக்சிஜனை நிறுத்தி தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசு உத்தரவிடவேண்டும். மத்திய அரசின் கட்டாயத்தின்பேரில் முன்பு இருந்த அரசு ஆந்திராவுக்கு அனுப்பினர். அந்த உத்தரவை மத்திய அரசு நிறுத்த வேண்டும். அதே போல, கேரளாவில் இருந்து ஆக்சிஜன் பெற வேண்டும்.
அதிமுக கட்சியில் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் குழப்பம் வரும் என்பது எதிர்பார்த்ததுதான். அதிமுக தேர்தலில் தோற்கும்போது இந்தப் பிரச்சினை வரும் என அனைவருக்கு தெரியும். தற்போது அதுதான் நடந்துள்ளது. இதற்கு சுமுகத் தீர்வு காணாமல் இப்போது தள்ளிப்போட்டுள்ளனர்.
தமிழகத்தில் எதிர்க்கட்சி வலுவாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம், எனவே சுமூகத் தீர்வை எட்ட வேண்டும். தேர்தல் நேரத்தில்ஏதோ ஒட்டிக்கொண்டு இருந்தார்கள், இப்போது பிரச்சினை ஆரம்பித்துள்ளது, இதற்கான முடிவை தீவிரமாக எடுக்கவில்லை என்றால் அதிமுகஎதிர்க்கட்சி வாய்ப்பை இழக்க வேண்டி வரும், என்றார்.