முழு ஊரடங்கை தமிழகத்தில் மீண்டும் அமல்படுத்தக்கூடாது: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

முழு ஊரடங்கை தமிழகத்தில் மீண்டும் அமல்படுத்தக்கூடாது: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
Updated on
1 min read

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தக்கூடாது என புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, கோவையில் நேற்றுசெய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அனைத்து தொழிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகிவரும் நிலையில், கரோனா தொற்றின் 2-வது அலை காரணமாகதற்போது தமிழகத்தில் 2-வது முறையாக வரும் 10-ம் தேதி (நாளை)முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு என தமிழகஅரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தளர்த்த வேண்டும். நம் நாட்டில், கரோனா தொற்றின் முதல் அலையின்போது, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு முடிந்த பின்னர்தான், கரோனா தொற்றின் வேகம் அதிகரித்தது. கரோனா தொடக்க காலத்தில் இது எப்படி தோன்றுகிறது?, இதற்கான சிகிச்சை முறைகள் என்ன?, பரிசோதனை முறை என்ன? என்பதனை கண்டறிவதற்காக அரசால், அப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகள் கழித்தும் அதையே பிடித்துக் கொண்டு, பின்பற்றுவது ஏற்புடையதல்ல. ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் வணிக நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், மருத்துவமனைகள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட முறைசாரா தொழிலாளர்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகன ஓட்டுநர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 90 சதவீதம் மக்கள் மிகப் பெரிய சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். முழு ஊரடங்கு கரோனாவுக்கான சிகிச்சையும் அல்ல. அதற்கான தடுப்பும் அல்ல. மக்கள் அதிகமாககூடக்கூடிய சமூக விழாக்களுக்கான கட்டுப்பாடுகள் விதிப்பது என்பது வேறு, ஒட்டுமொத்தமாக முழு ஊரடங்கு என்பது வேறு.

இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. கரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு என்பது தீர்வு ஆகாது. பாதிப்பு உள்ள இடத்தில் மட்டும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தலாம். தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தக் கூடாது. தமிழக அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in