

தென்தமிழகத்தில் மழை தொடரும்; வட தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில், வடதமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் வட தமிழக கடலோரத்தில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காலை ( இன்று) நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில் வடதமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 22, மதுக்கூர், தஞ்சையில் 9, பேராவூரணி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, தமிழக கடலோர பகுதிகளில் அனேக இடங்களிலும் உள்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. கனமழையை பொறுத்தவரை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர்த்த வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்யலாம். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. தொடர்ந்து வரும் காலங்களில், தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. வடதமிழகத்தில் படிப்படியாக மழை குறையும். வடக்கு திசையில் இருந்து இரவில் காற்று வீசுவதால், மேக மூட்டத்துடன், பனி பொழிவு தொடங்கும். ஒரு வேளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தங்கள் வந்தால் மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், வியாழக்கிழமை வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர் , திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் தென்மாவட்டங்களிலும், 11,12,13 தேதிகளில், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலும் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று வரை 65 செ.மீ (இயல்பாக பெய்ய வேண்டியது 39 செ.மீ) சென்னையில் 161 (71), கடலூர் 122(60), காஞ்சிபுரம் 181(58), நாகை 134 (79), திருவள்ளூர் 147(53) செ.மீ., மழை பதிவாகியுள்ளது.