

தமிழகத்தின் புதிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நேற்று நேரில்ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள விருந்தினர் பதிவேட்டில், ‘கலைஞரின் கைவண்ணம் கண்டோம், பிரமித்துப் போனோம்' என பதிவுசெய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் பராமரிப்பின்றி இருந்தால், அவற்றை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி உலகத்தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சராகப் பதவியேற்றதும் முதலில் இந்த நூலகத்தை ஆய்வு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரம் கடந்த 10 ஆண்டுகளாக அண்ணா நூற்றாண்டு நூலகம் பராமரிக்கப்படாமல் உள்ளது வருத்தம் அளிக்கிறது. அண்ணா நூற்றாண்டு நூலகம் மீண்டும் புத்துயிர் பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதற்காக கல்விதொலைக்காட்சி நிறுத்தப்பட மாட்டாது. இன்னும் ஆக்கப்பூர்வமான பல நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டு புதுமையான கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்ந்து வழங்கப்படும். கல்விக்கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் பெற்றோர்கள் கொண்ட ஒருகுழுவை உருவாக்கி நல்லதொரு முடிவை மாநில அரசு மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது பொதுநூலகத் துறை இயக்குநர் எஸ்.நாகராஜமுருகன், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் அறிவொளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.