Published : 09 May 2021 03:16 AM
Last Updated : 09 May 2021 03:16 AM

முழுஊரடங்கின்போது ஆதரவற்றவர்களுக்கும், விலங்குகளுக்கும் உணவு கிடைப்பதில் சிக்கல்: அரசும், தன்னார்வலர்களும் காருண்யத்துடன் செயல்படுவார்களா?

நாளை முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் ஆதரவற்றவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. படங்கள்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

கரோனா பரவலை கட்டுப்படுத்த முழுஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில், ஆதரவற்றவர்களுக்கும், விலங்குகளுக்கும் உணவு கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.

கரோனா 2-வது அலையைத் தடுக்க கடைசி ஆயுதமாக முழுஊரடங்கை அரசு கையில்எடுத்துள்ளது. அரசு உத்தரவுப்படி நாளை முதல் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவுகடைபிடிக்கப்படுகிறது. கடைகள் அனைத்தும்மூடப்படும். வாகனப் போக்குவரத்தும், மக்கள்நடமாட்டமும் முழுவதும் தடை செய்யப்படும். அதேநேரத்தில் பொதுமக்களை சார்ந்திருக்கும் ஆதரவற்றோரும், ஆதரவற்ற விலங்குகளும் உணவுக்கும், தண்ணீருக்கும் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர், புறநகர்ப் பகுதிகளில் ஆதரவற்றவர்கள் பலர் அகதிகள்போல் சுற்றித்திரிந்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள். இவர்களின் வாழ்வாதாரம் என்பது அவர்கள் நடமாடும் பகுதிகளில் உள்ள மக்களிடமிருந்தோ, கடைகளில் இருந்தோ, தன்னார்வலர்களிடம் இருந்தோ கிடைக்கும் உணவும், உடைகளும்தான்.

ஆனால், கரோனா ஊரடங்கு உத்தரவினால் இவர்களுக்கான உணவும், மருத்துவ உதவிகளும் கிடைக்காமல் போகும் வாய்ப்புகள் அதிகம். கடந்த ஆண்டில் முழுஊரடங்கின்போது பல தன்னார்வலர்கள் உயிரை பணயம் வைத்து ஆதரவற்றவர்களுக்கு உதவிகளைச் செய்தனர். திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் திருநெல்வேலி டவுனில் உள்ள பள்ளியில் ஆதரவற்றோர்களுக்கு இடம்ஒதுக்கப்பட்டு அவர்கள் பாதுகாக்கப்பட்டனர். தற்போது அத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது தெரியவில்லை.

தெருக்களில் அலைந்து திரியும் நாய்கள் பெரும்பாலும் ஹோட்டல் மற்றும் கல்யாண வீடுகளில் வீசப்படும் உணவுகளை நம்பியே வாழ்கின்றன. தற்போது, ஹோட்டல்களில் பார்சல் உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. கல்யாண நிகழ்ச்சிகள் பெரும்பாலும் தள்ளிவைக்கப்பட்டுவிட்டன.

இதனால், ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று சமூகநல ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து, திருநெல்வேலியைச் சேர்ந்த சமூகநல ஆர்வலர் சங்கரநாராயணன் கூறும்போது, ‘‘கடந்தமுறை தன்னார்வலர்கள்பலர் ஆதரவற்றோர்களுக்கும் , விலங்குகளுக்கும் உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை கொடுக்க முன்வந்தனர்.

தற்போதும் தன்னார்வலர்கள் தயாராகவே இருக்கிறார்கள். இவர்களுக்கு வேண்டிய அனுமதிகொடுத்தால் உதவியாக இருக்கும்.ஊரடங்கு நேரத்தில் விலங்குகளுக்கான மருத்துவ சேவை மிகவும் சிரமத்துக்குரியதாக இருக்கிறது.

கடந்தமுறை ஊரடங்கில் தன்னார்வலர்களாக செயல்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் ’’என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x