

ஆரணியில் அம்மா உணவக பெயர் பலகை அகற்றப்பட்டதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதிய பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் செயல்படுகிறது. இந்நிலையில், அம்மா உணவக பெயர் பலகையை கடந்த 6-ம் தேதி இரவு அகற்றப்பட்டுள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு, அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள், அம்மா உணவக பெயர் பலகையை ஆளுங்கட்சியினர் அகற்றிவிட்டதாக குற்றஞ் சாட்டினர்.
இதையறிந்த ஆரணி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, அம்மா உணவக பெயர் பலகை, அதே இடத்தில் மீண்டும் வைத்துள்ளது. சென்னையில் அம்மா உணவக பெயர் பலகையை அகற்றி, உணவகத்தை சூறையாடிய வழக்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேர் திமுவினர் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆரணி யில் உள்ள அம்மா உணவக பெயர் பலகை அகற்றப்பட்டு, மீண்டும் வைக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மா உணவக பெயர் பலகையை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தி உள்ளனர்.