

மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் ஒருவர் கரோனாவுக்கு பலியானது, மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னைக்கு அடுத்து மதுரையில் கரோனா தொற்று அதிகமாகப் பரவுகிறது. நகரில், தினமும் 600 முதல் 700 பேர் வரை இந்த தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். 10 முதல் 17 பேர் வரை இறப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், தொற்று பாதிப்பும், இறப்பும் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இன்று ஒரே நாளில் மதுரையில் உச்சமாக 1,217 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 7 பேர் இறந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதில், மாநகராட்சி அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியாவும் (31) அடங்குவார்.
கர்ப்பிணியாக இருந்தாலும் சண்முகப்பிரியா வழக்கம்போல் இந்த நெருக்கடியான கரோனா தொற்று பரவிய காலத்தில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்குக் கடந்த 3 நாட்களுக்கு முன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக அவர் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரோனா வார்டுகளில் இறப்பவரகள் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியுள்ளதால் மதுரை மயானங்களில் இறந்தவர்கள் உடல்களுடன் ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அதனால், கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் உடல்களை எரிக்க முடியாமல் உறவினர்கள் பரிதவிக்கின்றனர்.