

கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை நேற்று (மே 07) பதவியேற்றுக்கொண்டது. இந்நிலையில், மே 11 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மே 11-ம் தேதி பதவியேற்கவுள்ளனர். மறுநாள் 12-ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன் இன்று (மே 08) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆளுநர், கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக நியமித்துள்ளார். அவர், 10.05.2021 திங்கட்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு ஆளுநர் முன் உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்வார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர், 1996 முதல் 2001 வரை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இந்தத் தேர்தலில் கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.